ஹெல்த் ஸ்பெஷல் : தவிர்க்க கூடாத 10 உணவு
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ, நாம் சாப்பிடும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய மோகம், சத்துகளை மறந்து, சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்துவிட்டது. அதனால், உடலுக்கு அத்தியாவசியமாக கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால், உடல்நல குறைபாடுகள் ஏற்படுகிறது. ஆரோக்கியம் கெடுகிறது. இதை தவிர்க்க, குறிப்பிட்ட சில உணவுகளை, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அவசியம் சாப்பிட வேண்டும். அதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகளை பெற முடியும். அதன் விவரம் இதோ...
பால் பொருள்:
எலும்பு, பற்கள் வலிமை பெற கால்சியம் சத்து அவசியம். பால் பொருட்களில்தான் இது அதிகளவு உள்ளது. பால் பொருட்களில் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் அனைவருக்கும் ஏற்றது. அதேபோல், தயிரை தினமும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. கால்சியம் கிடைக்க தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடலாம். மேலும், உடலுக்கு அத்தியாவசியமான பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி12 மற்றும் புரத சத்தும் இதில் உள்ளது. காலை, மாலை என யோகர்ட்டை பகல் நேரத்தில் எப்போது வேண்டுமானலும் உட்கொள்ளலாம். யோகார்ட் மூலமாக 100 கலோரி கிடைக்கும்; கால்சியம், வைட்டமின் டி நிறைவாக உள்ள சிறந்த உணவு இது.
முட்டை:
புரத சத்துதான் ஆரோக்கியத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் அடிப்படை. முட்டை மிகச்சிறந்த புரத சத்துள்ள உணவு. இதை அடிக்கடி உணவில் அவித்தோ, பொரியல், ஆம்லெட் என எந்த வகையிலாவது சாப்பிடுவது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும்.
ஆளி விதை:
இந்த சிறிய விதையில் பெரிய பலன் உள்ளது. ஆளி விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இதில், பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு உள்ளது. இதில், நார்ச்சத்து அதிகம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவு அல்லது நொறுக்கு தீனிகளில் இதை உடன் சேர்த்துக்கொண்டால் எளிதில் செரிமானமாகும். குறிப்பாக, குழந்தைகள் இதை தனியாக சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்கள் விரும்பி சாப்பிடும் ஓட்ஸ், தயிர், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் இந்த விதைகளை கலந்து கொடுக்கலாம்.
பீன்ஸ்:
பீன்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம், தாமிரம் போன்ற தாது சத்துகளும் நிறைவாக உள்ளது. இது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
கீரை வகைகள்:
கீரை வகைகளில் குறைந்த அளவு வைட்டமின்-ஏ உள்ளது. அதிகளவில் வைட்டமின்-சி மற்றும் கே உள்ளது. உடலுக்கு தேவையான தாதுசத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-இ ஆகியவையும் உள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் வாரம் இரு முறையாவது கீரையை சாப்பிட வேண்டும். கீரையுடன் பூண்டு சேர்த்துக்கொள்வது சுவையை கூட்டும். கூடுதல் மருத்துவ பலன்களையும் தரும்.
நட்ஸ்:
நட்ஸ் அனைத்திலுமே வைட்டமின், கனிம சத்து அதிகம் உள்ளது. இதில் மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் உள்ளது. இது, நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால், இதய நோய் மற்றும் ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வாய்ப்பு குறைகிறது. அன்றாடம் 10 கிராம் என்ற அளவிலாவது சாப்பிடுவது நல்லது.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும். மேலும், இந்த பழங்கள் செரிமானத்துக்கு சிறந்தது. அதோடு, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தினசரி ஒரு ஆரஞ்சை பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிடுவது நல்லது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறுடன் அன்றைய நாளை தொடங்குவது கூடுதல் பலன் தரும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு:
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ சத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், கண், எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த கிழங்கை அப்படியே அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.
பெர்ரி பழம்:
ஸ்ட்ராபெரி போன்ற அனைத்து வகை பெர்ரி பழங்களிலும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. டயட்டில் இருப்பவர்களின் செரிமானத்தை ஊக்குவிக்க மிகச்சிறந்த உணவு இது. காலை உணவின் ஆரோக்கியம் அதிகரிக்க, அதில் சில செர்ரி பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
பூசணி விதை :
பூசணிக்காயில் உள்ள சத்துகளை போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக, நார்ச்சத்து, வைட்டமின், தாதுப்பொருள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. பூசணிக்காய் விதையை காயவைத்து, பொடியாகவோ, அப்படியேவோ நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.