பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை: உச்சநீதிமன்றம் உத்தரவு






தனது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்க பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாக பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால் கருவுற்ற 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக் கோரி, அவரது பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அந்த பெண் குழந்தையின் வயிற்றில் 26 வாரங்கள் வளர்ந்த கரு இருப்பதாகவும், குழந்தையை சுமக்கும் அளவிற்கு அந்த சிறுமியின் உடல் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தால் மட்டுமே, 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கருக்கலைப்பு செய்ய இந்திய சட்டத்தில் அனுமதி உண்டு .

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ,தனது மாமாவினால் கடந்த ஏழு மாதமாக பல முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தனக்கு வயிறு வலிப்பதாக அந்த சிறுமி கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதுதான் அவர் கர்ப்பமுற்றிருப்பது தெரிய வந்தது.

வரும் புதனன்று சண்டிகரிலுள்ள முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட உள்ளது. கருக்கலைப்பு செய்தாலோ அல்லது கருவை தொடர்ந்து சுமந்தாலோ, அந்த சிறுமி தனது வாழ்க்கையில் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து உச்சநீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல் அளிப்பார்கள்.

கடந்த வாரம், பஞ்சாப் மாநிலத்தின் வடக்கு சண்டிகர் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்று, தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டி அந்த சிறுமியின் பெற்றோர்கள் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது.

பிரசவக்கால உயிரிழப்பு, சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு ஆகியவற்றை தடுப்பதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பாலின பரிசோதனை செய்யப்பட்டு, மில்லியன் கணக்கான பெண் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த சில ஆண்டுளில், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பல சிறுமிகள் தொடர்பான வழக்குகள் உட்பட, 20 வாரங்களுக்கு மேலான கருக்களை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கக் கோரி, இந்திய நீதிமன்றங்களுக்கு பல மனுக்கள் வந்துள்ளன என பிபிசியின் டெல்லி செய்தியாளர் கீதா பாண்டே தெரிவிக்கிறார்.

இது போன்ற பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளுக்கு தங்கள் நிலைமை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், 20 வாரங்களுக்கு பிறகும் கூட அவர்கள் கருவுற்றிருப்பது கண்டறியப்படவில்லை என நமது செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த மே மாதம், இதேபோன்ற வழக்கு ஒன்றை விசாரித்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்வதா? வேண்டாமா? என்பதை மருத்துவர்கள் குழு முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

சமீபத்திய வழக்கில், `பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது காரணமாக, அவரின் இடுப்புப் பகுதி முழுமையாக வளர்ச்சியடையவில்லை எனவும், தற்போது தாய் மற்றும் சேய் இருவரும் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்த சிறுமியை ஏற்கனவே பரிசோதித்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.` என வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

`பாலியல் வல்லுறவினால் கர்ப்பமடைந்துள்ள அந்த 10 வயது சிறுமிக்கு இயற்கையான முறையிலோ அல்லது அறுவை சிகிச்சை மூலமோ பிரசவம் செய்ய முற்பட்டால், அது அந்த சிறுமி மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசு , இருவருக்குமே மிக ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் யூகித்துள்ளனர்.` என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளை விசாரிக்க வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும் மற்றும் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகள் குறித்து உடனடியாக முடிவெடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் நிபுணர்கள் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என தனது பொதுநல மனுவில் உச்சநீதிமன்றத்திற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

`பாதிக்கப்பட்ட சிறுமி தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்தோ, கர்ப்பமடைந்திருப்பதால் தான் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து குறித்தோ அறியவில்லை` என பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்த மருத்துவர் குழுவில் இடம்பெற்றிருந்த மன நல மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை அரசு வேலை செய்து வருகிறார். அவரது தாய் வீட்டுப் பணிப்பெண் வேலை செய்து வருகிறார்.

பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கருமுட்டை உருவாகும் நிகழ்வு ஒன்பது வயதிலிருந்தே துவங்கலாம். ஆனால் அந்த வயதில் கருவுறும் அளவிற்கு அவர்களுடைய உடல் வளர்ச்சியடைந்திருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகத்திலேயே குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அதிகம் உள்ளாவது இந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்த எண்ணிக்கை தொற்றுநோயை போல அதிகரித்து வருவதாக சில பிரசாரகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனை குறித்து பொது வெளியில் பேசுவதில் தயக்கம் இருக்கிறது மற்றும் இது குறித்து மிக அரிதாகவே பொதுவெளியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர், அந்தக் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோர்தான் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள்:

ஒவ்வொரு 155 நிமிடங்களுக்கும் ஒருமுறை 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார். 13 மணி நேரங்களுக்கு ஒருமுறை பத்து வயதுகுட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்.

2015-ஆம் ஆண்டு மட்டும் 10,000-க்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் வாழும் 240 மில்லியன் பெண்களுக்கு, 18 வயது நிறைவடையும் முன்னரே திருமணம் நடைபெற்றுள்ளது.

அரசின் கணக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற சிறுமிகளில் 53.22 சதவீதம் பேர், ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் கொடுமையில் ஈடுபடும் 50 சதவீதம் பேர், அந்த குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய நபர்கள் மற்றும் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad