வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி காதல் கதை!
இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர்.
நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மணமகள் - நடிகை ஷெர்லி தாஸ், வேலு பிரபாகரன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
இந்தத் திருமணம் குறித்து வேலு பிரபாகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் இறுதி நாள் வரை தன் மீது அன்பு காட்டுவதற்கும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்பாலினத் துணை வேண்டும் என்கிற ஏக்கம் இருந்துகொண்டு இருக்கும். இந்த வயதுக்கு மேல் என்னை வெளிப்படையாக ஏற்று எனக்குத் துணையாக வருவதற்கு இந்தச் சமூகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். எனவே எனக்கான துணையை இந்தச் சமூகத்தில் தேடுவது வீண் என்றுதான் எண்ணியிருந்தேன். எனக்கானத் துணையைத் தேடாமல் இருந்தேன்.
ஷெர்லி ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு முன் என்னைச் சந்தித்தார். என் நிலைமையைக் கண்டு, நீங்க ஏன் தனிமையாக இருக்கவேண்டும், நான் உங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன். என்னை நீங்களும் விரும்புகிறீர்கள் எனத் தெரியும். நாம் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று கேட்டார்.
இந்தச் சமூகத்தில் இப்படிப்பட்ட விஷயத்தையும் முன்னெடுத்துச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இவர் என் பணிக்கும் துணையாக இருப்பார் என்பதைப் புரிந்துகொண்டு திருமணம் செய்ய முடிவெடுத்தேன். என் மீதி நாள்களில் சமூகத்துக்குக் கருத்துகள் சொல்ல எனக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அப்படி ஒரு துணையாக ஷெர்லி இருப்பார். 15 வருடங்களாக அவரைத் தெரியும் என்றார்.
திருமணம் குறித்து ஷெர்லி கூறியதாவது:
நான் திருமணம் செய்வேன் என்று நினைக்கவில்லை. ஐந்தாறு வருடங்களாக நான் இந்தியாவில் இல்லை. கடந்த வருட இறுதியில் மீண்டும் வந்தேன். அவரைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். அவருடைய நேர்மை, உண்மை பேசுவது என்னைக் கவர்ந்தது. இனி படத்தில் நடிக்கமாட்டேன். நடிப்பதாக இருந்தால் எப்போதே நடித்திருப்பேன். போதும் என்று முடிவெடுத்துதான் வெளிநாடு சென்றேன் என்றார்.