உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது.




குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது!  அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே!

உடல் எடை அதிகரிக்க

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். சிக்ஸ்பேக் வரவழைக்கிறேன் பேர்வழி என ஆண்களும், மெல்லிடை வேண்டும் எனப் பெண்களும் எடை குறைத்து, உடல் மெலிந்து வருவது இன்று அதிகமாகிவருகிறது. `எனக்குள் என்ன நடக்கிறது?’ என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய அடிப்படையான விஷயம்.

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. சிறு குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், `இளங்காசம்’ எனும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக இருக்கக்கூடும். இந்தியாவில், குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் கவனிக்கத் தவறும்போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்பு உண்டு.

`டபுள் மீல்ஸ்’ டோக்கன் வாங்கி, என்னதான் கண்டதையும் சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேங்குது’ என்கிறவர்களும் இருக்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க சில உணவுகளும் வழிமுறைகளும் உண்டு. அவை இங்கே...

* ‘கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும்’ என்கிறது சித்த மருத்துவம். காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும். `கஞ்சி’என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள். உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம்.

* `இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

* பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

* வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

* வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

* இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

* எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

* பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்துகொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad