போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்? : தமிழக அரசு ஆலோசனை
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியை கோர்ட் அபராதமாக விதித்தது. அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 128 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் 68 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமாக உள்ள அந்த 68 சொத்துகளும் உள்ளன. அந்த சொத்துகளை தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 68 சொத்துகளை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. எனவே 6 மாவட்ட கலெக்டர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். பறிமுதல் செய்யப்படும் 68 சொத்துகளில் கணிசமானவை அரசு துறைகளுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவற்றை ஏலத்தில் விட்டு விடுவார்கள் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளளர். இது குறித்த இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும்.
பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள 68 சொத்துகளில் சில சொத்துகள் பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலங்களாகும். அவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்துக்கும், இந்த 68 சொத்துகள் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அதற்கு ஈடாக ஜெயலலிதா, சசிகலா பெயரில் வங்கிகளில் உள்ள பணம் எடுத்துக் கொள்ளப்படும். அந்த பணமும் அபராத தொகையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாவிட்டால், ஜெயலலிதா, சசிகலாவின் நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நகைகள் ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் விற்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. எனவே ஜெயலலிதா பெயரில் உள்ள சில சொத்துகள் மட்டுமே மிஞ்சும். குறிப்பாக போயஸ் கார்டன் வீடும் ஒன்று.
போயஸ்கார்டன் வீடு உள்பட ஜெயலலிதா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு அவரது வாரிசுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அதாவது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருவரும் அதற்கு உரிமை கோர முடியும். அவர்கள் சட்டப்படி உரிமை கோராவிட்டாலோ அல்லது அதில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அந்த சொத்துகளை மாநில அரசு பறி முதல் செய்ய முடியும். ஜெயலலிதாவின் சொத்துகளில் பெரும்பாலானவை அரசுடமை ஆகும் நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும் ஆலோசித்து வருகிறது. சட்ட நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. வாரிசு பிரச்சனையை தவிர்த்து போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்க, அறிவிப்பு வெளியிட அரசு தயாராகி வருகிறது. எனவே போயஸ்கார்டன் வீடு பறிமுதல் செய்யப்படுவதற்கான உரிய அறிவிப்பை தமிழக அரசு எந்த நேரத்திலும் வெளியிட வாய்ப்புள்ளது.