எல்லையில் துப்பாக்கிச்சூடு இந்திய தூதரக அதிகாரிக்கு பாக். சம்மன்
இஸ்லாமாபாத்:
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று இந்திய ராணுவ வீரர்கள் சுட்டதில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லையில் இந்திய வீரர்களின் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய துணை தூதரக அதிகாரி ஜேபி சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குவது உண்மையில் கண்டிக்கத்தக்கது. இது மனித கண்ணியம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.