போஸ்ட் ஆபீசுக்கு கூடுது மவுசு




தபால் அலுவலகங்களில் இருப்பு தொகை ₹50 இருந்தால் போதுமானது. சேமிப்பு கணக்கு துவங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இவர்களுக்கு பாஸ் புத்தகம் வழங்க முடியாமல் தபால் துறை திணறி வருகிறது. வங்கிகளில் தற்போது கெடுபிடிகள் அதிகரித்து விட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கடும் நிபந்தனைகள் போடப்படுகின்றன. நம்முடைய வங்கி கணக்கிலிருந்து, ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கவும் நிபந்தனைகள் உள்ளன. கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்மில் மாதத்திற்கு 5 முறையும், வேறு வங்கி ஏடிஎம்மில் 2 முறையும் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் சேவை கட்டணமாக ஒவ்வொரு முறையும் ரூ.23 பிடித்தம் செய்வார்கள். தனியார் வங்கிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அங்கு சாதாரண சேமிப்பு கணக்குக்கே நிபந்தனைகளின் பட்டியல் நீளும்.

இப்படிப்பட்ட நிலையில், தபால் துறையின் வங்கி சேவையை நவீனமயமாக்க மத்திய அரசு பல்ேவறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தபால்துறை வெறும் தபால்கள், மணியாடர்களை நம்பியிருந்த காலம் போய், பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தங்க நாணயங்கள் விற்பனை, இன்சூரன்ஸ் திட்டங்கள், தங்கமகள் சேமிப்பு திட்டம், கங்கை நீர் விற்பனை திட்டம், திருப்பதி இ டிக்கெட் வழங்கும் திட்டம் என புதிய திட்டங்களால் தபால்துறை களைகட்டி வருகிறது.

தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் வங்கிகள் இல்லாததால் நகர்ப்புறங்களுக்கு அடிக்கடி   செல்ல முடியாதவர்கள் கிராம தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கூட தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கி பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல வங்கிகள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை என ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்க கட்டாயப்படுத்தி வருகின்றன. ஆனால் தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கிற்கு ₹50 மட்டும் இருப்பு இருந்தாலே போதுமானது. எனவே தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்குகள் துவங்குவது அதிகரிக்க தொடங்கியுள்ளன. தபால் அலுவலக ஊழியர்கள் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தியும் கணக்குகளை அதிகரித்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் பெரிய பாதிப்பாக தமிழகத்தில் பல தபால் நிலையங்களில் தற்போது கணக்கு தொடங்கும்மக்களுக்கு பாஸ்புக் அளிக்கப்படுவதில்லை. அதிலும் கிராமங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி விட்டு நூற்றுக்கணக்கானோர் பாஸ்புக் கேட்டு 3 மாத காலமாக காத்திருக்கின்றனர். அனைத்து தபால் நிலையங்களிலும் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து பாஸ்புக் விரைவில் வரும் என சொல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘‘வங்கிகளை விட தபால் அலுவலகங்களில் பணம் எடுப்பதும், போடுவதும் எளிதாக உள்ளது. மேலும் ரூ.50க்கு தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்க முடிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் பலர் தபால் அலுவலகத்தில் கணக்கு ெதாடங்கியுள்ளனர். கணக்கு தொடங்கிய ஒரு வார காலத்திற்குள் பாஸ்புக் கிடைக்கும் என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் கணக்கு தொடங்கியவர்களுக்கே இன்னமும் பாஸ்புக் கிடைக்கவில்லை’’ என்றனர்.

மதுரை மண்டலத்தில் 11 தபால் கோட்டங்கள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டங்களில் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் பாஸ்புக் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் வங்கிகள் ேசமிப்பு கணக்கில் இருப்பு கட்டணமாக ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில் தபால் அலுவலகங்களில் 50 ரூபாய் இருந்தால் போதுமானது என்பதால் அதிக கணக்குகள் துவங்கப்பட்டு வருகிறது.

ஏடிஎம் கார்டு தட்டுப்பாடு

தபால் அலுவலகங்களில் பாஸ்புக் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க ஏடிஎம் கார்டுகளும் பல வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. தபால்துறை நவீனமயமாக்கத்தின் ஒருபகுதியாக கோட்ட வாரியாக பல இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டன. தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏடிஎம்களில் எவ்வித சிரமமும் இன்றி பணத்தை எடுத்து செல்கின்றனர். புதிய கணக்குகளை தொடங்கியவர்கள் ஏடிஎம் கேட்டு விண்ணப்பித்தால் கார்டுகள் தட்டுப்பாடாக இருப்பதாக தபால்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad