திருடன், திருடன்’என கோஷமிட்டு இங்கிலாந்தில் மல்லையாவை விரட்டிய கிரிக்கெட் ரசிகர்கள்
லண்டன்: இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை பார்த்து, ‘திருடன், திருடன்’என ரசிகர்கள் கோஷமிட்டு அவரை விரட்டியடித்தனர். இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9,000 கோடி பாக்கி வைத்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா அங்கு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்து வருகிறார். கடந்த வாரம் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அடுத்து நடக்கும் இந்திய போட்டிகள் அனைத்தையும் பார்க்க வருவேன் என்றும் மல்லையா அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா, தென் ஆப்ரிக்கா போட்டியை பார்க்க மல்லையா வந்தார். மைதானத்திற்கு வெளியே இருந்த இந்திய ரசிகர்கள் சிலர், ‘அதோ திருடன் அங்க போறான். திருடன், திருடன்’ என இந்தியில் கோஷமிட்டு மல்லையாவை அவமானப்படுத்தினர். கூனிக் குறுகிப் போன மல்லையா, வேக வேகமாக இந்திய ரசிகர்களை கடந்து ஓடினார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.