ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு
நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் உலகளாவிய அளவில் மூன்று நொடிகளுக்கு ஒருவர் நோய் எதிர்ப்பு மருந்து பலனளிக்காததால் உயிரிழப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசின் ஆய்வொன்று கணக்கிட்டிருக்கிறது.
எனவே நோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பதை பிரிட்டிஷ் மருத்துவர்கள் குறைக்கவேண்டுமென இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவை அழுத்தம் தருகிறது.
அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ்ஆய்வக விஞ்ஞானிகள் தற்போதைய நோய் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றை மாற்றியமைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பாக்டீரியாவுக்கு எதிரான தன் வீரியத்தை இந்த மருத்து இழந்துவிட்டிருந்த நிலையில் மாற்றப்பட்ட புதுரக மருந்தான வான்கோமைசின் தற்போது மிக வீரியமானதாக மாறியிருப்பதால் அதை அதிசயமருந்து என்று அவர்கள் அழைக்கின்றனர்.
முன்பைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்திவாய்ந்த இது மூன்று வழிகளில் செயற்படுவதால் குறிப்பிட்ட ரக பாக்டீரியாவால் தாக்கு பிடிக்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்த மாற்றியமைக்கப்பட்ட மருந்தை மருத்துவர்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு முக்கியமான முன்னேற்றம் தான் என்றாலும் காசநோய், மலேரியா, எயிட்ஸ் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துகள் படிப்படியாக செயலிழந்துவரும் போக்கு மருத்துவ உலகின் கவலையை நீடிக்கவே செய்கிறது.