இந்தியாவில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த கர்நாடக இளைஞர்: சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா
அமெரிக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. முகமது செஃபி அர்மர் என்ற நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். யூசப் ஆலந்து என்ற பெயரில் இணையதளம் மூலம் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
ஐஎஸ் இயக்கத்தின் கிளை அமைப்புகளாக ஜூடத் அல்காலிஃபா உட்பட பல்வேறு அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கி அவற்றில் இளைஞர்களை செஃபி அர்மர் சேர்த்து வந்திருப்பது தெரியவந்தது. 600 முதல் 700 இளைஞர்களுடன் பேஸ்புக் மூலம் முகமது செஃபி நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபு பகீர் அல்கக்தாதியின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிரியாவில் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செஃபி அர்மரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அறிவித்துள்ளது.