மயில்கள் இணைசேருவது இல்லையா? நீதிபதி கருத்தால் சர்ச்சை
மயில்கள் குறித்து ராஜஸ்தான் நீதிபதி கூறிய கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி மகேஷ் சந்திர சர்மா நேற்று முன்தினம் பசு பராமரிப்பு மையம் பற்றிய வழக்கில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு தீர்ப்பை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘‘ஆண் மயில் வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியத்தை கடைப்பிடிக்கிறது. அது பெண் மயிலுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகி பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது அதனால் தான் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இந்த கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆண் மயிலும், பெண் மயிலும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமா என்பது குறித்து அறிந்துகொள்ள கூகுள் இணையதளத்தை இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் மொய்த்தது தனிக்கதை.
பலர் நீதிபதியின் கருத்து குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து தள்ளிவிட்டனர்.காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ‘‘பசு ஆக்சிஜனை உள்ளே எடுத்துக்கொள்கிறது; ஆக்சிஜனை வெளியிடுகிறது. மயில் பிரமச்சாரி; நமது நீதிபதி அய்யாவிடம் இருந்து வந்துள்ள அறிவார்ந்த வார்த்தைகள் இவை. நமது பாடப்புத்தகங்களை திருத்துங்கள்’’ என கிண்டல் செய்துள்ளார்.