மாடுகளை விற்க கூடாது என்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுப்பு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி : இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்வதை தடை விதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மாடு ,ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு கடந்த மாதம் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல விதமான போராட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஐதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் பகீம் குரோசி என்பவர் கடந்த 7ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையானது மத சுதந்திரத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் விவசாயிகளுக்கு பண நெருக்கடியும், வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமும் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும் சட்டப்படி உணவுக்காகவோ அல்லது தெய்வத்திற்காகவோ விலங்குகளை வெட்டவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று கடந்த 1960ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட விதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மத்திய அரசின் இந்த மாட்டிறைச்சி குறித்தான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் மனு குறித்தான விசாரணையை நேற்றைக்கு விசாரிப்பதாக கூறியிருந்தனர். இதையடுத்து மனு, நேற்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசின் அறிவிப்பால் மாடு வளர்ப்போர், இறைச்சி வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மத்திய அரசு கடந்த மாதம் விதித்த கட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசு பதிலை ஜூன் 29ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.மனுவில் உடனடியாக தடை விதிக்க முடியாது. வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.