அடுத்தாண்டு அனுப்புகிறது நாசா சூரியனை ஆய்வு செய்ய ‘தி பார்க்கர்’ விண்கலம்
வாஷிங்டன்: சூரியன் பற்றிய ஆய்வுக்காக ‘தி பார்க்கர்’ என்ற விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையம் நாசா அடுத்தாண்டு அனுப்பவுள்ளது.
இதுவரை சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை பற்றி ஆய்வு நடத்த பல விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனையே ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. காரணம் சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகளவிலான வெப்பம். இந்த வெப்பத்தையும் தாக்குப்பிடித்து சூரியனை சுற்றி வலம் வந்து ஆய்வு மேற்கொள்ள விண்கலம் ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. இதற்கு ‘தி பார்க்கர்’ விண்கலம் என பெயரிடப்பட்டுள்ளது.
விண் இயற்பியல் விஞ்ஞானி யூஜின் பார்க்கரை கவுரவிக்கும் வகையில் இந்த விண்கலத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூரியன் உட்பட பல நட்சத்திரங்களில் இருந்து எரிசக்தி எப்படி வெளிப்படுகிறது என பல கருத்துக்களை கடந்த 1950ம் ஆண்டுகளிலேயே கூறியவர் பார்க்கர். சிறிய கார் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தி பார்க்கர்’ விண்கலம் மிக நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. சூரியனின் அதிக வெப்பம் மற்று கதிரியக்கத்தை தாக்குப்பிடித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தை சுற்றி 4.5 அங்குலம் தடிமனுக்கு கார்பன் கவசம் உள்ளது. இந்த விண்கல நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலைக்குப்பின் ஏவப்படும்.
இதுகுறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் பார்க்கர் கூறுகையில், ‘‘சூரியன் பற்றிய ஆய்வு விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமானது. இதுவரை சூரியன் பற்றிய ஆய்வை யாரும் மேற்கொண்டதில்லை. சூரியனுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி பல ஆச்சரியமான தகவல்கள் நிச்சயம் வெளியாகும்’’ என்றார். பார்க்கர் சோலார் திட்டத்தின் மற்றொரு விஞ்ஞானியும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான நிக்கோலா பாக்ஸ் கூறுகையில், ‘‘சூரிய இயற்பியல் பற்றி கடந்த 60 ஆண்டுகளாக நம்மை திகைக்க வைத்த பல கேள்விகளுக்கு பார்க்கர் சோலார் ஆய்வு விடை அளிக்கவுள்ளது’’ என்றார்.