விளம்பர நோக்கில் தரம் தாழ்ந்து செயல்படுகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி : புதுவை முதல்வர் ஆவேசம்
புதுச்சேரி:
புதுச்சேரி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநரான கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி, பேரவையில் பேசினார். புதுவை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநர் கிரண்பேடியை அதிகாரிகள் சந்திக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என கூறியுள்ள நாராயணசாமி, மாநில நிர்வாகத்தின் அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி நிர்வாகத்தையே கிரண்பேடி ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக சாடியுள்ளார். வெளிப்படை தன்மை என்ற பெயரில் அரசு ரகசியங்களை வெளியிட்டு ரகசியகாப்பு பிரமாணத்தை கிரண்பேடி மீறி விட்டதாக நாராயணசாமி புதுவை பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் மீது உண்மையான அக்கறையில்லை என்றார். புதுவையின் எந்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநரை நேரில் சந்திக்க கூடாது. அப்படி சந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகளையும், மக்கள் தேர்ந்தெடுத்த சட்டசபை உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று கூறியுள்ளார் கிரண்பேடி. இப்படிப்பட்ட ஆளுநர் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையா என ஆவேசமாக உரையாற்றினார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரி சிறப்பு கூறுநிதியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை ஆளுநர் கிரண்பேடி தடுத்துள்ளதாக சாடினார். கிரண்பேடி தரம் தாழ்ந்து விளம்பர நோக்கில் பேசியும், செயல்பட்டும் வருவதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகளை மதிக்காமல் மக்கள் மத்தியில் அவர்களையும் தரக்குறைவாகவும், தாழ்ந்தும் பேசி வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என சாடியுள்ளார். மேலும் அமைச்சர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவதாக ஆதாரமற்ற புகார்களை கிரண்பேடி முன்வைப்பதாக சாடினார். தொடர்ந்து அதிகார எல்லையை மீறி செயல்பட்டு வரும் ஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என MLA-க்களுக்கு நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் கிரண்பேடி என சாடியுள்ள அவர், புதுவைக்கு துணைநிலை ஆளுநர் தேவையில்லை என்றார்.