பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.
பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருது அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மீது குற்றச்சாட்டு
மேலும், பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். பில்லியன் கணக்கில் வெளிநாட்டு நிதியை இந்தியா பெற்று இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுள்ளதாக சாடிய டிரம்ப், கூடுதலாக நூற்றுக்கணக்கான நிலக்கரி சுரங்கங்களை கட்ட சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.