மோடியிடம் பேச்சுதான் அதிகமாக உள்ளது, செயல்பாட்டில் ஒன்றும் இல்லை ராகுல் காந்தி விமர்சனம்
நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் மோடியின் மதிப்பெண் பூஜ்ஜியம் என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:–
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒரு பயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் மிரட்டப்படுவதாக உணருகிறார்கள். சாதிகள் இடையே சண்டையை ஏற்படுத்துகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. ஆதிதிராவிட மக்கள் தாக்கப்படுகிறார்கள். எனது நண்பர்களான பத்திரிகையாளர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணருகிறார்கள்.
இது தான் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கட்சியின் மனநிலை ஆகும். இது காங்கிரஸ் கட்சியின் மனநிலை அல்ல. நாட்டை வழி நடத்துவதில் காங்கிரசின் மனநிலையை பா.ஜனதா பின்பற்ற வேண்டும். கர்நாடகத்தில் ஏழை மற்றும் சாமானிய மக்களுக்காக முதல்–மந்திரி சித்தராமையா சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். அவர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இது பாராட்டத்தக்கது ஆகும்.
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவாக சொன்னார். எந்த தேர்விலும் தேர்ச்சி பெற 100–க்கு 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் மோடியின் மதிப்பெண் பூஜ்ஜியம் ஆகும்.
1 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்புகளை இந்த அரசால் உருவாக்க முடியவில்லை. இது தான் மோடியின் உண்மை நிலை. வேலை வாய்ப்பு, விவசாயிகளின் பிரச்சினைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே மோடி மற்றும் பா.ஜனதா கட்சி விரும்புகிறது. நாட்டின் எதிர்காலத்திற்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது மிக முக்கியம் ஆகும். இந்த பிரச்சினைக்கு மோடியால் தீர்வு காண முடியவில்லை.
தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரியுங்கள் என்று பிரதமர் பேசுகிறார். மோடியின் பேச்சு மட்டுமே அதிகமாக உள்ளது. ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகாத்மா காந்தியின் சாதியை பற்றி பேசுகிறார். பா.ஜனதா தலைவர்களுக்கு காந்தி பற்றி பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. காந்தி யார் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு தெரியும். ஆங்கிலேயர்களுக்கு கூட தெரியும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.