அனைத்து மாநில முதல்–மந்திரிகளை திரட்டுகிறார், கேரள முதல்–மந்திரி



சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், இது தொடர்பாக விவாதிக்க அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

திருவனந்தபுரம்,


கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவுக்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இது தொடர்பாக விவாதம் நடந்த அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு
இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டத்தை நேற்று கூட்டி முதல்–மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மேலும் எதிர்க்கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இது தொடர்பாக விவாதம் நடத்த அனைத்து மாநில முதல்–மந்திரிகளை திரட்ட அவர்களுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். அதில், நாம் ஒருங்கிணைந்து மத்திய அரசின் இந்த உத்தரவை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் இதே போன்று ஜனநாயகத்துக்கு எதிரான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க நேரிடும். எனவே இது குறித்து விவாதிக்க உரிய தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

வழக்கு தொடர முடிவு
அனைத்து மாநில முதல்–மந்திரிகள் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் உத்தரவை எதிர்த்த சட்டரீதியாகவும் நாங்கள் அணுக உள்ளோம்.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து கேரள ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம். மேலும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்ட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் கேரள முதல்–மந்திரி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url