``பறக்கும் வான்கோழி` போன்ற பறவையினம் வாழ்ந்தது கண்டுபிடிப்பு
சாம்பல் நிற கங்காரு அளவிலான 'பறக்கும் ராட்சத வான்கோழி' போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும்.
இலை குப்பைகளை கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி, முட்டையிட்டு, புதைத்து வைப்பதற்கு பேர்போன நவீன கால மல்லீஃபெவுல் பறவை முற்கால பறவை உறவினம்தான் இந்த சாம்பல் நிற கங்காரு அளவிலான 'பறக்கும் ராட்சத வான்கோழி'
இருப்பினும், இந்த 'பறக்கும் ராட்சத வான்கோழியான', ப்ராகுரா காலினாசியா அவ்வாறு செய்யவில்லை.
மல்லீஃபெவுல் பறவை பெற்றிருக்கும் பெரிய பாதங்களோ, தனி சிறப்பு மிக்க கூர்நகங்களையோ இது பெற்றிருக்கவில்லை என்று `ராயல் சொசைட்டி` சஞ்சிகையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாறாக, இந்தோனீஷியாவிலும், பசிபிக்கிலும் வாழும், இன்றும் மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் சில பறவையினங்களைப்போல, ப்ராகுரா காலினாசியா வெப்பமான மணல் அல்லது மண்ணில் தங்கள் முட்டைகளை புதைத்து வைத்தன.
அடிலெய்டிலுள்ள ஃபிளின்டஸ் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று இந்த அறிக்கை தயாரிக்க புதிய மற்றும் புதை படிவ எச்சங்களை ஆய்வு செய்திருக்கிறது.
இவற்றில் சில மாதிரிகள் முதன்முதலில் 1800களில் சேகரிக்கப்பட்டன. புதிய மாதிரிகள் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற தைலாகோலியோ காவெர்ன்ஸில் இருந்து கிடைத்தவை. இங்குதான் சுண்ணாம்பு குழாய்கள் மூலம் எண்ணற்ற முற்கால விலங்குகள் அழிந்ததாக கருதப்படுகிறது.
மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் அழிந்துவிட்ட பறவையினங்களில் 5 புதிய இனங்களை விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். அவற்றில் ப்ராகுரா காலினாசியா மிகவும் பெரியதாகும்.
11,700 ஆண்டுகள் முதல் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிளாய்ஸ்டோசீன் காலத்தில் இந்த பறவையினங்கள் எல்லாம் வாழ்ந்துள்ளன.
அப்படியானால், வயிற்றுப்பையில் குட்டியைப் பேணும் ராட்சத விலங்கு போன்ற சில பெரிய உருவங்களை கொண்ட அடையாள முக்கியத்துவ விலங்குகளாகக் கருதப்படும் விலங்குகளோடு இவை வாழ்ந்திருக்கும் என்று பொருள்படுகிறது.
வயிற்றுப்பையில் குட்டியைப் பேணும் ராட்சத விலங்குகள் ஆஸ்திரேலிய கண்டத்தில் நவீன மனிதர்கள் நுழைந்த பின்னர் சற்று அழிந்து போய்விட்டன.
அழிந்துபோன பல பெரிய பறவைகளில் டோடோ போன்றவை பறக்க முடியாததாக இருந்தாலும், ப்ராகுரா காலினாசியா நிச்சயமாக பறந்திருக்க முடியும் என்று ஃபிளின்டஸ் பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
வலுவான இறகு எலும்புகளைக் கொண்ட இது மரங்களில் தங்கியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் முற்கால பறவையினங்கள் பற்றிய இந்த ஆய்வு "ஒபன் சைன்ஸ்" பத்திரிகையில் வெளியாகியது.