வியக்க வைக்கும் காளான் மகத்துவம்
சுவையும் அதிகம்... சத்தும் அதிகம்!
* உலகில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. பல வகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. நாம் சமையலுக்காக உபயோகப்படுத்தக்கூடியது White button மற்றும் Oyster உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகைகளைத்தான்.
‘‘நாம் விரும்பி சாப்பிடும் உணவுப் பட்டியலில் காளானுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. தன்னிகரற்ற தனிச்சுவை கொண்ட காளானில் எண்ணற்ற சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.
அப்படி காளானுக்கு என்னதான் மகிமை இருக்கிறது?
* காளானில் குறைந்த அளவு சோடியமும் மற்றும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள Beta Glucan பாலிசாக்கரைடு பித்த உப்புகளுடன் பிணைந்து ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, காளான் உண்பது இதய நலத்துக்கு மிகவும் நல்லது.
* காளானில் இருக்கும் Beta - Glucan என்னும் பாலிசாக்கரைடு பல வகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது.
* காளானில் இருக்கும் Lentysine, Eeritadenin வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு சீராகவும் செயல்படுகிறது. புரதம் அதிகம் என்பதைப் போலவே பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவும் காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி.யும், சோடியம் 9 மி.கி.யும் உள்ளன. எனவே, இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளானை சொல்லலாம்.
* காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டது என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் காளான்
சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
* புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கும் தன்மை படைத்தது காளான். சில வகை காளான்கள் கீமோ தெரபி சிகிச்சையில் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கும் திறன் கொண்டவை.
* காளானில் உள்ள புரதம் உடலுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியது. எனவே, காளானில் உள்ள புரதம் முழுமைத் தன்மை கொண்டது என்று சொல்லலாம்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது காளான். மேலும், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் (Autoimmune disorder) உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு செல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.
ஆன்டி ஆச்சிடென்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு மட்டுமல்லாமல் புற்றுநோயையும் தடுக்கவல்லது காளான்.
* காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் கே, சி, டி, பி போன்றவற்றுடன் எண்ணற்ற மினரல் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் இருப்பதால் நோய் சார்ந்த சிகிச்சை முறையில் காளானை மருத்துவத்துறையில் பயன்படுத்துகிறார்கள்.
* காளான் உண்பதால் ஆஸ்துமா போன்ற சுவாச அமைப்பு குறைபாடுகளை தடுக்க முடியும். காயங்களை எளிதில் ஆற்றுவதற்கும் காளான் உதவும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கவும் காளான் நல்ல சாய்ஸ்.
*அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 கிடைக்க ஒரு நல்ல
மாற்று உணவுப்பொருள் காளான்.
* பட்டாணி, பால், முட்டை, மீன், கோழி போன்ற உணவுப்பொருட்களைக் காட்டிலும் காளானிலேயே அதிகம் புரதச்சத்து உள்ளது. சராசரியாக 100 கிராம் காளானில் 35 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது. காளானில் உள்ள புரதம் எளிதில் செரிமானம் ஆகும் என்பது கூடுதல் சிறப்பு.
* காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், வயிற்றுப்புண், ஆசனவாய்ப்புண் ஆகியவை குணமாகும்.