ஹோண்டா புதிய பைக் அறிமுகம்
இந்தியாவில் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. 250சிசி முதல் 800சிசி வரை திறன் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள் என ஆட்டோமைபைல் உலகில் சொல்லப்படுகின்றன. மிடில்வெயிட் பைக்குகளை தயாரிக்கும் அறிவிப்பை தெரிவித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
முதல்கட்டமாக, ஹோண்டாவின் ஜப்பான் மற்றும் தாய்லாந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல பொறியாளர்களை இந்தியாவில் பணியாற்ற அந்நிறுவனம் அழைத்துள்ளது. இந்தியா வந்துள்ள ஹோண்டாவின் வெளிநாட்டு பொறியாளர்கள், ஒரு மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்குவார்கள். அந்த மாடல் மோட்டார் சைக்கிள்கள், உலகத்தரத்திலான தயாரிப்பாக இருக்கும்.
ஹோண்டாவின் இப்புதிய மோட்டார் சைக்கிள்கள் ஹிட்டடித்து விட்டால், மற்ற எல்லா நாடுகளிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆசியாவிற்கான ஹோண்டாவின் செயல் அதிகாரி ரோரி அக்காய் அபே கூறுகையில், “ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் வலிமையான வியாபாரத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக, மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் விற்பனையின் இங்கு அசுர வளர்ச்சியில் உள்ளது. அந்த வளர்ச்சி, எங்களை ஈர்த்துள்ளது.
அதனால்தான் இந்தியாவில் நாங்கள் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம். இந்தியாவில்தான் இந்த பைக் தயாரிப்புகளுக்கான கட்டமைப்புகள் எளிதாக உள்ளது” என்றார். ஹோண்டாவின் இந்த அறிவிப்பை ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மிக விரைவில் இந்திய சந்தையில் ஹோண்டாவின் மிடில் வெயிட் பைக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.