பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள்
புகையிலை வியாபாரிகள் என்று சொல்வது புகையிலை பொருட்களை குடிசைத் தொழிலாக செய்து லட்சங்களை சம்பாதிப்பவர்களை மட்டுமல்ல கோடிகளை குவிக்கும் பெரு நிறுவனங்களையும் சேர்த்துதான். இவர்கள் ஒற்றை இலக்கு ‘யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு வருவாய் குவிய வேண்டும்’ என்பதுதான். அதனால் இவர்கள் இலக்காக வைத்து செயல்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களைதான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களைதான்.
காரணம் மாணவர்களை புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக்குவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெருக்குவதுடன், நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் திட்டம்தான், ‘அதற்காக விதவிதமாக, குறைந்த விலையில் புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி அருகில் விற்கின்றனர்’ என்கிறார் புகையிலைக்கு எதிரான குழந்தைகளின் அமைப்பின் செயல் இயக்குனர் சிரில் அலெக்சாண்டர்.
அவர் மேலும் ‘தமிழக பள்ளிகளில் அருகில் ‘கூல் லிப்’ என்ற பெயரில் தடை செய்யப்பட்ட புகையிலை தூள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் 10 உறைகள் இருக்கும். விலை ரூ.15. பல வகையான புகையிலை பொருட்கள் மாணவர்களை குறி வைத்து விற்கப்பட்டாலும் இந்த கூல் லிப்தான் மாணவர்களை மட்டுமல்ல மாணவிகளையும் அதிகம் ஈர்க்கிறது. சென்னையில் பள்ளிகளில் இருக்கும் கடைகளில் இந்த புகையிலை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. கடைக்காரர்களே அதன் பெருமைகளை சொல்லி மாணவர்களிடம் விற்கின்றனர்.
சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா மேம்பாலம், வடபழனி, திநகர், கல்லூரிசாலை, கோபாலபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, ராயப்பேட்டை, கேகேநகர் பகுதிகளில் உள்ள 22 மாநகராட்சி, பிரபல தனியார் பள்ளிகளின் சுற்றுப்புறத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். எல்லா பள்ளிகளுக்கும் 100 கெஜத்திற்குள் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. ‘எங்கும் புகைப்பிடிக்காதீர்; புகைப்பிடிப்பது குற்றம்’ என்ற அறிவிப்புகள் இல்லை.
மேலும் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிலும் சீருடையில் இருக்கும் மாணவர்கள் கேட்டாலும் புகையிலை பொருட்களை விற்கின்றனர். அதிலும் 66.7 சதவீத கடைகளில் புகையிலை பொருட்களை பளிச்சென தெரியும் வகையில் வைத்து விற்கின்றனர். மேலும் பள்ளிக்கு அருகில் இருக்கும் 84 சதவீத கடைகளில் முன்பாக நின்று பலரும் புகைத்தபடி இருக்கின்றனர். மேலும் 62 சதவீத கடைகளில் நோட்டு புத்தகங்கள், தின்பண்டங்களுடன் புகையிலை பொருட்களையும் சேர்த்து விற்கின்றனர். பெரும்பான்மையான கடைகளில் சிகரெட்களை 1, 2 என்று தனித்தனியாகவே விற்கின்றனர்.
ஏதோ ஒன்றிரண்டு பேர் இதற்கு பழகியிருக்கலாம் என தோன்றலாம். ஆனால் ஒரு வகுப்பில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் போது ஒரு மாணவனுக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டால் மார்ச் மாதம் பள்ளி முடிவடையும் போது குறைந்தது 30 மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்’’ என்று எச்சரிக்கிறார்.
புகார் தெரிவிக்க...
புகையிலை பொருட்கள் விற்பனை, விளம்பரம், விநியோகம் செய்வது தொடர்பான சட்ட மீறல்கள் நடந்தால் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் 1800-110-456 என்ற இலவச அழைப்பு எண்ணையோ அல்லது 044-24320802 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.