அந்நிய மண்ணில் இருந்து தாயகத்துக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியல்: இந்தியா முதலிடம்
நியூயார்க்: வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சொந்த ஊரில் இருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாசிக்கிறார்கள். வேலை நிமித்தமாக, அல்லது அங்கேயே குடியேற்றம் பெறுவது என பல நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது
இதனிடையே புலம்பெயர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சம்பாதித்து தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அதிக அளவு பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ஐநா வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பணியாற்றும் இந்தியர்கள் அங்கு பெறும் வருமானத்தை தங்களது குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். அந்த வகையில் இந்தியர்கள் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 62.7 பில்லியன் டாலர்கள் தொகையை அதாவது 4 லட்சத்து 7 ஆயிரத்து 550 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளனர். சீனர்கள் 61 பில்லியன் தொகையை அதாவது 3 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.