சங்கமித்ராவில் நடிக்க ஆசைப்படும் நீதுசந்திரா
சுந்தர்.சி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பில உருவாகும் படம், சங்கமித்ரா. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து சங்கமித்ராவில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக நீதுசந்திரா தெரிவித்துள்ளார். சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக தேர்வானார். இது 300 கோடி ரூபாய் செலவில், 2 பாகங்களாக உருவாகிறது. அதற்கு 2 வருடங்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த விஷயம் ஸ்ருதிஹாசனுக்குத் தெரியும். இந்தப் படத்தில் நடிப்பதற்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து லண்டனிலுள்ள சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் வாள்வீச்சு பயிற்சி பெற்ற அவர், சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் நடந்த சங்கமித்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ஆனால், திடீரென சங்கமித்ரா படத்திலிருந்து அவர் விலகினார். முழுமையான ஸ்க்ரிப்ட் தனக்குத் தரப்படவில்லை என்றும், படப்பிடிப்புத் தேதிகள் சரியான முறையில் தனக்குச் சொல்லப்படவில்லை என்றும் இயக்குனரையும், தயாரிப்பு நிறுவனத்தையும் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஆனால், அவரை சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்தது.
மேலும், ஸ்ருதிஹாசன் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது. விரைவில் இன்னொரு ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும், அதற்கான தேர்வு நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சங்கமித்ராவில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக நீதுசந்திரா தெரிவித்துள்ளார். சங்கமித்ரா கதாபாத்திரத்தில் அர்ப்பணிப்புடன், மகிழ்ச்சியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.