ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய இளம்பெண் சமயோசித முடிவால் உயிர் தப்பினார்
மராட்டிய மாநிலம் மும்பையில் ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய இளம்பெண் சமயோசிதமாக எடுத்த முடிவால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள குர்லா ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி நடைபெற்ற அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
பாந்தராப் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரதிக்ஷா நடேகர். தனது நண்பரை பார்க்க கடந்த மாதம் 13 ஆம் தேதி பகல் 11 மணியளவில் குர்லா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு செல்போனில் பேசியபடி 7வது நடைபாதையை தண்டவாளம் வழியே கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத நிலையில் சரக்கு ரெயில் ஒன்று அருகில் வந்துள்ளது. என்ன செய்வது என அறியாத அவர், நடைபாதையின் நடுவில் நின்றதால் தப்பிக்கவே வழியில்லாத நிலை.
சில அடி தூரத்தில் மிக நெருக்கத்தில் ரெயிலும் வந்து விட்டது. தப்பிக்க பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
கண்முன் மரணம் நிகழபோகிறது என்பதை உணர்ந்த அந்த இளம்பெண்ணின் நிலை கண்டு பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கதறி ஓலமிட்டனர். அதற்குள் மூன்றடி பக்கத்தில் வந்து விட்டது ரெயில்.
யோசிக்கக் கூட நேரமில்லாத ப்ரதிக்ஷா திடீரென சமயோசிதமாக செயல்பட்டார். ரெயில்வே தண்டவாளங்களில் நடுவில் நின்றிருந்த அவர் ரெயில் நெருங்கும் ஒரு நொடியில் கீழே படுத்து விட்டார்.
உயிரை இழக்க இருந்த ப்ரதிக்ஷா ரெயில் தண்டவாளங்களுக்கு இடையில் படுத்ததால் உயிரை காப்பாற்றிக்கொண்டார்.
சில சிராய்ப்புகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். ரெயில் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.