பால் கலப்படமும்... அதற்கு பின்னால் உள்ள சர்வதேச சதியும்...!
பாலுக்கும் தண்ணீருக்கும் உள்ள பந்தத்தைவிட நெருக்கமாக இருக்கிறது, பாலும்... அண்மைய சர்ச்சைகளும். தரமற்ற பால், பாலில் கலப்படம் என்று பால் குறித்து உலாவும் சர்சைகள் அனைத்தும் நம் மூளையில் இருக்கும் அமிக்டாலாவுக்கு அதிகம் வேலை வைப்பதாக இருக்கிறது. உண்மையில், நம்மூர் பால் தரமற்றதா... அமைச்சர், தம்குடிகள் மீது உள்ள அக்கறையில்தான் பாலில் கலப்படம் என்கிறாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால், பாலில் ஆடையாகப் படர்ந்திருக்கும் சர்வதேச அரசியல் தெரிகிறது. அந்த அரசியல் நம் உள்ளூர் பால் விற்பனையாளர்களையும், விவசாயிகளையும் காவு வாங்க வன்மத்துடன் காத்திருப்பது தெரிகிறது.
பாலில் படர்ந்திருக்கும் அரசியல் இதுதான்:
RCEPபிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான (Regional Comprehensive Economic Partnership) தாராள வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை ஆசியான் நாடுகளிடையே (புர்னே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஆசியான் நாடுகள் தவிர்த்து ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இருக்கின்றன. அதாவது, உலக மக்கள்தொகையில் 50 சதவிகிதத்தை நிரப்பும் நாடுகள் மற்றும் உலக உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவிகிதம் பங்களிக்கும் நாடுகள் வளர்ச்சிக்கான கூட்டுத் தாராளமய பொருளாதாரப் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கின்றன.
தாராளமயம், கூட்டுப் பொருளாதாரம், வளர்ச்சி என வார்த்தைகள் வசீகரித்தாலும், அங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் எதுவும் நம் எளிய விவசாயிகளுக்கும், நமக்கும் நன்மைபயப்பதாகத் தெரியவில்லை. ஆம், இந்தத் தாராள வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை என்பது சந்தையை எந்த அளவுக்குத் திறந்துவிடுவது என்பதைச் சுற்றியே சுழல்கிறது. அதாவது, இந்த ஒப்பந்தம் செயல்வடிவம் பெறும்பட்சத்தில், இறக்குமதிக்கான வரி பெரும் அளவில் தளர்த்தப்படும். அந்நிய நேரடி முதலீட்டைக் கண்காணித்துவரும் ஓர் அமைப்பு, இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்பட்சத்தில் இறக்குமதி வரி 0 - 3 சதவிகிதம் வரை குறையும் என்கிறது.
குறிப்பாக, பால் மீதான வரி முற்றாகக் குறைக்கப்பட்டுப் பெருமளவில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் இருக்கும் நியூசிலாந்து தேசம் உலக அளவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அது, தன் தேசத்தின் பால் பொருள்களை இந்தியாவுக்கு மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பிற தேசங்களுக்குத் தங்குத்தடையின்றி ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறது.
பால் சர்ச்சையும்... சர்வதேச ஒப்பந்தமும்:
பால் அரசியல்சரி... அதற்கும் பால் குறித்த இப்போதைய சர்ச்சைகளுக்கும் என்ன சம்பந்தம்...? இருக்கிறது... நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. ஏற்கெனவே, நம் தேசம் பால் உற்பத்தியில் தன்னிறவை அடைந்த தேசம். ஒரு பொருள் உள்நாட்டிலேயே அபரிவிதமாக உற்பத்தியாகும்போது, அதே பொருளை வெளியிலிருந்து ஒருவர் வந்து விற்க வேண்டுமென்றால், முதலில் உள்நாட்டில் உற்பத்தியாகும் அந்தப் பொருள் குறித்து ஒரு தவறான பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்தப் பொருள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கவல்லது, தரமற்றது என்ற புனைவுகளைப் புனைந்து அந்தச் சந்தையில் சேதம் உண்டாக்க வேண்டும். அப்போதுதான், அந்தச் சந்தையைக் கைப்பற்ற முடியும். இது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.
இதைப் புரிந்துகொள்ள நீங்கள் வெளியிலிருந்தெல்லாம் தரவுகள் தேட வேண்டாம். பால் சந்தையை கொஞ்சம் ஊன்றிக் கவனித்தாலே போதும். ஆம், முதலில் பால் சந்தை நம் எளிய விவசாயிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் இரண்டு மூன்று மாடுகளை வைத்துக்கொண்டு நான்கு தெருக்கள் வட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்குப் பால் விற்றுக்கொண்டு இருந்தார்கள். இதனால் உள்ளூர்ப் பொருளாதாரமும் வலுவாக இருந்தது. இந்தப் பெரும் சந்தையைக் கைப்பற்றத் துடித்த பெரும் நிறுவனங்கள்... அந்தப் பால் ஆரோக்கியமற்றது, அசுத்தமானது என்று அவதூறுகளைப் பரப்பி, பால் உற்பத்தி மற்றும் சொந்தமாக வணிகம் செய்துகொண்டு செழுமையாக வாழ்ந்துகொண்டு இருந்த விவசாயிகளை, தங்களுக்குப் பால் விற்பனை செய்யும் ஏஜென்டுகளாக மாற்றின. பால் சந்தையை முழுவதுமாகக் கைப்பற்றின. இப்போது அதே யுக்தியைப் பயன்படுத்தி அந்தச் சந்தையை வெளிநாடுகள் கைப்பற்றப் போகின்றன.
பால் சந்தையை இந்திய நிறுவனங்கள் கைப்பற்றியதிலும் தகிடுதத்தங்கள் இருந்தாலும், இந்தியப் பெரும்முதலாளிகள், கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து... இந்திய விவசாயிகளிடமிருந்துதான் பாலைக் கொள்முதல் செய்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறியபின் நியூசிலாந்து கோ-க்களின் பால் இந்தியச் சந்தையில் ஓடும்.
இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளைச் சரியாகக் கணித்த அரசு, கேரள அரசு மட்டும்தான். அண்மையில், கேரள பால்வளத் துறை அமைச்சர் கே.ராஜு, ''இந்த ஒப்பந்தத்தில் உள்நாட்டுப் பால் உற்பத்தியும், அதைச் சார்ந்த பொருளாதாரமும் முடங்கும்'' என எச்சரித்திருக்கிறார். கேரள அரசாங்கமும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
தேவை... அண்மைப் பொருளாதாரம்!
அனந்து அப்படியானால், பாலில் கலப்படம் இல்லை என்கிறீர்களா.. இந்தியச் சந்தையில் ஓடும் பால் அனைத்தும் ரசாயனம் கலக்காததா...? நிச்சயம் அனைத்தும் தரமானது என்றும் ரசாயனம் கலக்காதது என்றும் சொல்லிவிட முடியாது. பதப்படுத்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ரசாயனம் இருக்கிறது. பாலில் யூரியாவரை கலக்கப்படுகிறது என்கிறார்கள் வேளாண் செயற்பாட்டாளர்கள். ஆனால், அதற்காக இன்னொரு தேசத்திலிருந்து வரும் பால் மட்டும் ஆரோக்கியமானது என்று எப்படிச் சொல்ல முடியும்?
சரி... இதற்கு என்னதான் தீர்வு...?
எளிமையான தீர்வை முன்வைக்கிறார் வேளாண் செயற்பாட்டாளர் அனந்து. அவர் முன்வைப்பது அண்மைய பொருளாதாரம் என்னும் தத்துவத்தை. அவர் சொல்கிறார், “நம்முடன் எந்த உணர்வு பிணைப்பும் இல்லாமல் வெளியிலிருந்து வரும் எந்தப் பொருளிலும் கலப்படம் இருக்கும்... தரமற்றவையாக இருக்கும். இதிலிருந்து நாம் மீள வேண்டும். ஆரோக்கியமான உணவைத்தான் உண்ண வேண்டும், பருக வேண்டும் என்று விரும்புவோமானால்... அண்மைய பொருளாதாரத்தை ஊக்குவியுங்கள். உங்கள் பகுதிகளில் விளையும், உற்பத்தி ஆகும் பொருள்களை வாங்குங்கள். விவசாயிகளிடம், சிறு வணிகர்களிடம் ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இதனால் உள்ளூர்ப் பொருளாதாரமும் வளரும்... நுகர்வோருக்கும் தரமானப் பொருள்கள் கிடைக்கும்” என்கிறார்.