தெருக்களுக்கு என் பெயரை வைத்தால் போதுமா? இளையராஜா கேள்வி
வேலு பிரபாகரன் எழுதி இயக்கி நடித்துள்ள படம், ஒரு இயக்குனரின் காதல் டைரி. சுவாதி ஹீரோயின். நாளை ரிலீசாகும் இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, ‘சில காலத்துக்கு முன், தமிழ் இசை தொலைந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. அப்போது, ‘மச்சானை பார்த்தீங்களா...’ என்று ஒருவர் கிளம்பி வந்தார். குறைந்தபட்சம் இளையராஜாவுக்கு ஒரு பல்கலைக்கழகம், சாலைக்குப் பெயர், பள்ளிக்கூடம் என பெயர் வைத்திருக்க வேண்டும். வாழும் கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காத இந்த சமூகம் எங்களுக்குத் தேவையில்லை.
இறந்த பிறகு பத்மபூஷன், பதம்விபூஷன் கொடுப்பது ஏன்? இவ்வளவு பெரிய மனிதரை, இப்படி ஓரங்கட்டி வைத்துள்ளார்களே என்று வேதனையாக இருக்கிறது’ என்றார். அதற்குப் பதிலளித்துப் பேசிய இளையராஜா, ‘தெருக்களுக்கு என் பெயரை வைத்தால் போதுமா? வீதிக்கு நான்கு பள்ளிக்கூடங்கள் என் பெயரில் திறந்துவிட்டால் போதுமா? உங்கள் மனதில், ரத்தத்தில், உயிரில் எப்போதுமே நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என் இசை. அதைவிடுத்து மண்ணிலும், மரத்திலும் என் பெயரை எழுதி வைத்தால் நீண்ட காலம் நின்றுவிடுமோ? இளையராஜா என்ற பெயர் உங்கள் உயிரில் இருக்கிறது’ என்றார்.