சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஸ்மிருதி மீது வளையல் வீச்சு
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நடைபெற்ற மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றிய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வளையல் வீசிய வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். குஜராத் மாநிலத்தில் மத்திய அமைச்சர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. அம்ரேலி நகரின் விவசாய பல்கலைக்கழக அரங்கில் பாஜ அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விழாவுக்கு தலைமை ஏற்று மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த மோடா பந்தாரியா கிராமத்தைச் சேர்ந்த கஸ்வாலா எனும் வாலிபர், அமைச்சரை நோக்கி வளையல்களை வீசியபடி, ‘வந்தே மாதரம்’, என கோஷம் எழுப்பினார். மேடைக்கு தொலைவில் இருந்து வீசப்பட்டதால், அமைச்சரை வளையல் தாக்கவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது.
இதனிடையே கஸ்வாலாவை போலீசார் மடக்கிப் பிடித்து அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது போலீசாரிடம் இரானி கூறுகையில், ‘‘அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளட்டும். மேலும் வளையலை அவர் வீசினாலும் பரவாயில்லை. அவற்றை சேகரித்து அவரது மனைவிக்கு பரிசாக அனுப்பி வைப்பேன்’, எனக் கூறினார். கஸ்வாலா அடிப்படையில் விவசாயி. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்துள்ளது போல குஜராத் மாநிலத்திலும் விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்து அறிவிக்காததால் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளார், என தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி குற்றஞ்சாட்டினார். மறுப்பு தெரிவித்து காவல்துறை எஸ்பி ஜகதீஷ் படேல் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியிலோ அல்லது பிற அமைப்புகளையோ கஸ்வாலா சார்ந்திருக்கவில்லை. மேலும் ‘வந்தே மாதரம்’ என்று மட்டுமே கோஷமிட்டு உள்ளார். எனவே அதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை’, என விளக்கம் அளித்தார்.