கிராபிக்ஸில் குண்டாகிறார் கீர்த்தி
சாவித்ரி வாழ்க்கை படமான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் நடிக்க சமந்தா, அனுஷ்கா, நித்யா மேனன் ஆகியோர் ஆலோசிக்கப்பட்டனர். முதலில் ஒப்புக் கொண்ட சமந்தா கூடுதல் வெயிட் போடவேண்டும் என்றவுடன் நழுவினார். பிறகு அதேபடத்தில் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அனுஷ்கா, நித்யா மேனன் கால்ஷீட் ஒத்துவராததால் நடிக்கவில்லை. இறுதியாக சாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனார்.
கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டும்படி இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்தபோது சரி சரி என்று தலையாட்டினார். ஆனால் படப்பிடிப்பு நெருக்கத்திலும் எடை கூடியபாடில்லை. இவரைவிட்டால் வேறுவழியில்லை என்று படப்பிடிப்பை தொடங்கிவிட்டனர். பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் இரட்டை ஜடைபோட்டு ஸ்டைலாக வரும் சாவித்ரி போல் கீர்த்திக்கு மேக் அப் போடப்பட்டது. ரகசியமாக ஷூட்டிங் நடந்தபோதும் அவரது தோற்றம் இணைய தளத்தில் லீக் ஆனது.
அதேவேகத்தில், ‘சாவித்ரி சாயலில் இருந்தாலும் அவரைப்போல் குண்டாக இல்லையே..’ என்று சிலரின் கமென்ட்டும் வெளியாகி இருக் கிறது. பாகுபலி 2 படத்தில் நடித்தபோது குண்டாக இருந்த அனுஷ்காவை விஎப்எக்ஸ் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் ஒல்லியாக மாற்றியதுபோல் ஒல்லியாக இருக்கும் கீர்த்தியை அதே டெக்னிக்கை பயன்படுத்தி குண்டாக்கிவிடலாம் என்று பட தரப்பு சமாதானம் சொல்கிறது.