ரேன்சம்வேர் வைரஸை தொடர்ந்து ஆண்ட்ராய்டு போன்களை அச்சுறுத்தி வரும் ஜூடி
புதுடெல்லி: ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்புகளைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை காலி செய்ய புதிய மால்வேர் வேகமாக பரவி வருகிறது. ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.65 மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்துள்ளதாக செக் பாயிண்ட் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூடி மால்வேர் கூகுள் பிளேஸ்டோரில் அதிகம் பரப்பப்பட்ட ஒன்றாகியுள்ளது.
ஜூடி மால்வேர் ஆட்டோ-கிளிக்கிங் வகையை சேர்ந்த ஹாட்வேர் ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் தெரியும் விளம்பரங்களை தானாக கிளிக் செய்யும் தன்மை கொண்டவை. இதுவரை 41 செயலிகளில் ஜூடி மால்வேர் இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து செயலிகளும் எனிஸ்டூடியோ கார்ப் எனும் கொரிய நிறுவனம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற தாக்குதல் மற்ற நிறுவனங்களின் செயலிகளிலும் காணப்பட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிக்கப்பட்ட சாதனங்களில் அதிகப்படியான விளம்பரங்களில் தானாக கிளிக் செய்கிறது, இது விளம்பரங்களை பதிவிடுவோருக்கு லாபம் ஈட்டச் செய்கிறது. பாதிக்கப்பட்ட செயலிகள் தற்சமயம் வரை 4.5 மில்லியன் முதல் 18.5 மில்லின் டவுன்லோடுகளை கடந்துள்ளது. பாதிக்கப்பட்ட செயலிகளில் பல்வேறு செயலிகள் நீண்ட காலமாக கூகுள் பிளேவில் இருந்து வருவதோடு சமீபத்தில் தான் இவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. எனினும் தீங்கை விளைவிக்கும் ஜூடி மால்வேர் கோடு எவ்வாறு செயலியில் நுழைந்துள்ளது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.