நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்?
36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், அதன் இணைய தளத்தை உருவாக்கியவர்களுக்கு மோசடி வழியில் பணம் சம்பாதித்து தருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட செயலிகள் தென் கொரிய மேம்பாட்டாளர் கினிவினியால் தயாரிக்கப்பட்டவை.
எனிஸ்டூடியோ என்ற பெயரில் இந்நிறுவனம் பளே ஸ்டோரில் வீடியோ விளையாட்டுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த அனைத்து விளையாட்டுகளிலும் ஜூடி என்ற ஒரு பாத்திரம் இடம்பெறுகிறது. சுமார் 4 மில்லியன் முதல் 18 மில்லியன்கள் முறை வரை விளையாட்டுக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
'கண்டுபிடிக்க முடியாதப்படி ஒளிந்திருப்பது'
பிற செயலி மேம்பாட்டாளர்கள் தயாரித்த பல செயலிகளில் இந்த தீய குறியீடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
''தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒருவர் இன்னொருவரிடமிருந்து இந்தக் குறியீடுகளை பெற்றிருக்கலாம்,'' என்று செக் பாயிண்ட் கூறியுள்ளது.