ஃபேஸ்புக் கொடுத்த நடிப்பு வாய்ப்பு!
‘தொண்டன்’ படத்தில் சமுத்திரகனியின் தங்கையாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருப்பவர் அர்த்தனா. துருதுருப் பெண்ணாகவும், அநீதியை தட்டிக் கேட்பவராகவும் இருமுகம் காட்டியிருக்கும் அர்த்தனா, இப்போது கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் புதுமுகமாக இருக்கிறார். அவரது குண்டுக் கண்களை உருட்டி விக்ராந்தை மிரட்டும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வழக்கம்போல இவரும் கடவுளின் தேசத்து இறக்குமதிதானாம். அர்த்தனாவே தன்னை பற்றி சொல்கிறார். பிறந்தது திருவனந்தபுரம். பள்ளிப் படிப்பு எர்ணா குளத்தில். கல்லூரி படிப்பு திருவனந்தபுரத்தில். படிக்கும் போதே கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இயங்குவேன். அப்படியே பாக்கெட் மணிக்காக விளம்பர படங்களில் நடிச்சேன். சுரேஷ்கோபி சாருடன் ஒரு டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.
அவர் மகன் கோகுல் சுரேஷ் படத்தில் நான்தான் ஹீரோயின்னு முடிவு பண்ணினார். இதற்கிடையில் ஃபேஸ்புக்ல இருந்த என்னோட போட்டோஸை பார்த்துட்டு தெலுங்கு படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. சுரேஷ் கோபி சார் அந்த படத்துல நடிச்சுட்டு வாம்மான்னு அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக்கால் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் கனவுலே கூட நினைச்சுப் பார்க்கலை. என்னோட முதல் அறிமுகம் தெலுங்குலேதான் நடந்தது. ‘சீத்தம்மா அந்தாளு ராமய்யா சித்தாளு’ என்ற படத்தில் ராஜ் தருண் ஜோடியாக நடிச்சேன். அதன்பிறகு மலையாளத்தில் கோகுல் சுரேஷுக்கு ஜோடியாக நடிச்சேன். இந்த படங்களை பார்த்துட்டுதான் தமிழ்ல ‘செம’ என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜி.வி.பிரகாஷுடன் நடிச்சிட்டிருக்கேன்.
அதற்கு பிறகு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் விதார்த் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்றாவதாக வந்த வாய்ப்புதான் ‘தொண்டன்’. சமுத்திரகனி சார் படம் என்றதும் கதைகூட கேட்காமல் ஒப்புக் கொண்டேன். என்ன கேரக்டரில் நடிக்கப்போகிறோம் என்ற ஆர்வம் இருந்தது. அவருக்கே போன் பண்ணி கேட்டேன். ‘குட் கேர்ள், என் தங்கை’ என்று மட்டும் சொன்னார். நிஜ வாழ்க்கையில் நான் செய்ய நினைத்த சிலவற்றை ‘தொண்டன்’ செய்ய வைத்தது. இரண்டு படங்களில் ஹீரோயினா நடித்துக் கொண்டிருந்தாலும், முதல் படம் தங்கை கேரக்டராக அமைந்தது குறித்து நிறைய பேர் விசாரிக்கிறார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. காரணம் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பவள் இல்லை. கதையில் என் கேரக்டரின் பங்கு என்ன என்றுதான் பார்ப்பேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படித்தான்.