ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 51வது நாளாக நீடிப்பு நெடுவாசல் போராட்டம்: தீவிரப்படுத்த திட்டம்
ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் பொதுமக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12-ம் தேதி துவக்கினர். நேற்று 50வது நாளாக போராட்டம் நடந்தது. இதில், மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் கண்கள், வாயை கட்டிக்கொண்டு மக்கள் பிரச்னையை செவிகொடுத்து கேட்காதது போல் சித்தரித்து சிறுவர்கள் கண், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டும், அவர்களிடம் விவசாயிகள் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் மனுகொடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
இன்று 51வது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக தினம் தினம் பல்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகிறோம். கண் மூடி மவுனம் சாதிக்கும் அரசுகளிடம், திட்டத்தை ரத்து செய்ய கோரி கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து தரப்பினரும் ஆதரவு கோரியுள்ளோம்’ என்றனர்.