5000 தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகளை முடக்கம்: பாக். அரசு அதிரடி
இஸ்லாமாபாத்:
சர்வதேச அளவில் பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்க 5000 தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகளை முடக்கி பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு சர்வதேச அளவில் நிதி நடவடிக்கை அதிரடிப்படை என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த பயங்கர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத அமைப்புக்கு செல்லும் நிதியையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் தடை பட்டியலில் இடம் பெற்றால் ஒரு நாட்டால் கடன் வாங்கும் திறன் பாதிக்கப்படும்.
இந்த அமைப்பு அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நிதி குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிப்படையாக செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் என சுமார் 5000 அமைப்புகளின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. மேலும் இந்த வங்கி கணக்குகளில் ரூ.19,200 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.