சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட 5 முக்கிய அம்சங்கள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வென்றது.



வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா மகத்தான வெற்றி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல, அண்மைக்காலமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா பெற்ற முக்கிய வெற்றியை சாத்தியமாக்கிய 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

கணிக்க முடியாத கேதார் ஜாதவ்: துல்லியமாக பந்துவீசிய பூம்ரா

முதலில் பேட் செய்த வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 300 அல்லது 330 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
27.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து மிக வலுவான நிலையில் இருந்த வங்கதேசம், பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரான கேதார் ஜாதவின் பந்துவீச்சை சமாளிப்பதில் திணறியது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஜாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
தான் பந்துவீசிய 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களை பெற்ற ஜாதவ், வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

இதே போல், வங்கதேச இன்னிங்சின் இறுதி கட்டங்களில் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பூம்ரா, 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி அந்த அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.


கணிக்க முடியாத கேதார் ஜாதவ்


சோபிக்காத வங்கதேச பின்வரிசை மட்டைவீச்சாளர்கள்
எளிதாக 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய வங்கதேச அணி, 264 ரன்களை மட்டும் பெற்றதற்கு, அந்த அணியின் அனுபவம் மிகுந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் மகமத்துல்லா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது முக்கிய காரணமாகும்.

அணித்தலைவர் முர்தஸாவை தவிர, வங்கதேச பின்வரிசை வீரர்கள் யாரும் அதிரடி ஆட்டம் ஆடாத காரணத்தால், அந்த அணியின் ரன்குவிப்பு வெகுவாக மட்டுப்பட்டது.

மேலும், முக்கியமான தருணத்தில் தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.

துல்லியமாக பந்துவீசிய பூம்ரா

வியூகத்திலும் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

வங்கதேச அணியின் ஆட்டத்தை எளிதில் கணிக்க இயலாது. மிகவும் ஆக்ரோஷமாக வங்கதேச அணி விளையாடக்கூடும் என்றெல்லாம் போட்டியின் முன்னர் கூறப்பட்டாலும், வங்கதேச அணியை விட வியூகம் வகுத்து, அதனை திறன்பட நிறைவேற்றியதில் இந்திய அணியின் பங்கு சிறப்பாக இருந்தது.
அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற சுழல் பந்துவீச்சாளர்களை , ஏற்கனவே பலமுறை வங்கதேச அணி வீரர்கள் சந்தித்துள்ளதால், அவர்களுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத கேதார் ஜாதவை கோலி பந்துவீச அழைத்தார். இது மிகவும் பலன் அளித்த வியூகமாகும்.

இதே போன்று, இறுதி கட்டங்களில் பூம்ராவை பந்துவீச செய்ததன் மூலம், அவர் தனது துல்லியமான 'யார்க்கர்' பந்துகளால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

கோலி, ரோகித் சரவெடி

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் 2 பவுண்டரிகளையும், அடுத்த ஓவரில் ரோகித்சர்மா 3 பவுண்டரிகளையும் விளாசி, வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விரைவாக ரன் குவிக்கும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர், 46 ரன்களை எடுத்த தவான் ஆட்டமிழந்த போதிலும், விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜோடி தங்கள் அதிரடி ஆட்ட பாணியை தொடர்ந்தனர்.
129 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 123 ரன்களுடனும், 78 பந்துகளில் விராத் கோலி 96 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 40.1 ஓவர்களில் இலக்கை எட்டி இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.

அதிரடி ஆட்டம் ஆடிய கோலி, ரோகித்



நேர்த்தியாக பந்துவீச தவறிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்
ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி பேட்டிங் செய்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வங்கதேச பந்துவீச்சாளர்கள் போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை என்றே கூறலாம்.

8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் வங்கதேச அணியால் ஒரு விக்கெட் மட்டுமே பெற முடிந்தது.

வங்கதேச அணித்தலைவர் முர்தஸாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் பந்துவீசாதது அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad