30 கம்ப்யூட்டர்கள்; 2 ஏ.சி. வகுப்பறைகள்: ஹைடெக் வசதிகளுடன் இயங்கும் குக்கிராமப் பள்ளி

கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த ஆண்டுவிழாவில் பங்கேற்ற மாணவர்கள்.



முப்பது கம்ப்யூட்டர்களுடன் அதி நவீன ஆய்வகம்; குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள்; ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள்; ஜெராக்ஸ், பிரின்டர், ஸ்கேனர் கருவிகள், வகுப்பறைகளில் திரும்பிய பக்கமெல்லாம் வண்ணமயமான அழகான சுவரோவியங்கள், ஹைடெக் கழிவறை…

இப்படியாக சர்வதேச தரத்தில் விளங் குகிறது கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் இந்த அரசுப் பள்ளி உள்ளது.

1000 பேருக்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட ஒரு குக்கிராமம் கீழப்பாலையூர். பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். விவசாய கூலி வேலைதான் பிரதான தொழில். இதிலிருந்தே அந்த கிராம குழந்தை களின் கல்வி நிலை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தொடக்கத்தில் இந்த ஊரில் தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. இங்குள்ளவர்கள் 5-ம் வகுப்பை முடித்து விட்டு 6-ம் வகுப்பில் சேர 6 கி.மீ.தொலைவில் உள்ள கம்மாபுரம் செல்ல வேண்டும். மணிமுத்தாறு தண்ணீரைக் கடந்து சென்றுதான் பள்ளிக்கு செல்ல முடியும். பருவமழைக் காலங்களில் ஆற்றில் வேகமாக தண்ணீர் ஓடும். ஆகவே, அந்த நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஆற்றை கடப்பது ஆபத்தானது என்பதால் பெரும்பாலான மாணவர்கள் 5-ம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை. .

இதனால் கீழப்பாலையூரிலேயே நடுநிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதன் பயனாக 2012-ம் ஆண்டில் கீழப்பாலை யூர் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த சூழலில்தான் கீழப்பாலையூர் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு பணிகளை தொடங்கினார். இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன். இந்தப் பள்ளியின் ஒட்டுமொத்த முகமும் மாறியதற்கு இவர்தான் பிரதான காரணம். கீழப் பாலையூரில் இந்த மாற்றங்கள் எவ்வாறு சாத்தியமானது என்பது பற்றி வசந்தன் விவரித்தார்.

“ஏழைகள் என்பதாலேயே வசதிகள் நிறைந்த வகுப்பறை எங்கள் மாண வர்களுக்கு வெறும் கனவாகி விடக் கூடாது என விரும்பினேன். தலைமை யாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் கூடி பேசினோம்.

நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி யதால் புதிய கட்டிடம் கிடைத்தது. குழந்தைகள் விரும்பும் வகையில் வகுப்பறை சூழலை மாற்ற முடிவு செய்தோம். முதலில் அழகான வண்ண ஓவியங்களைத் தீட்டினோம். ஒரு வகுப்பறையில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தினோம். வயர்லெஸ் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தினோம். இதற்கு ரூ.90 ஆயிரம் வரை செலவானது. எனது சொந்த பணத்திலும், நண்பர்கள் சிலரது உதவியாலும் இதனை செய்ய முடிந்தது.



இந்த வகுப்பறை காட்சிகளை எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். இதனைப் பார்த்து உள்ளூர் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்து பலர் பாராட்டினார்கள். ஏராளமானோர் பள் ளிக்கு மேலும் பல உதவிகளைச் செய்ய முன்வந்தனர். என்னுடைய நண்பர்கள், உறவினர்களும் உதவி செய்தனர். இதன் காரணமாக இன்னொரு வகுப்பறையில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தினோம்.


எங்களது இந்த பணியைப் பாராட்டி, ஜப்பானில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் தொடர்பு கொண்டனர். முழுமதி அறக் கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அளித்த ரூ.2 லட்சம் நிதி யுதவியால் பள்ளி கழிவறையை மிக நவீன முறையில் கட்டியுள்ளோம்.

உள்ளூர் மட்டுமின்றி இப்போது வெளியூர்களில் இருந்தும் மாண வர்கள் கீழப்பாலையூர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குதான் அரசு இலவச சைக்கிள்களை வழங்கு கிறது. நடுநிலைப் பள்ளிக்கு இல்லை. இந்த சூழலில் எங்கள் மாணவர்களுக்கு சைக்கிள் கிடைத்தால் வசதியாக இருக்கும் என பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தேன். இதனைப் படித்த ஜெர்மனியில் வசிக்கும் நண்பர் ஒருவர் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு மாண வருக்கும் தனித்தனி பாதுகாப்பு பெட்ட கங்கள் வழங்கியுள்ளோம். வீட்டு பாடங்களுக்கு தேவையான புத்த கம், நோட்டு தவிர மற்றவற்றை மாண வர்கள் இங்கேயே வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.



பள்ளியின் வண்ணமயமான வகுப்பறையில் உற்சாகமாக அமர்ந்திருக்கும் குழந்தைகள்.
அதிநவீன பிரின்டர், ஸ்கேனர், ஜெராக்ஸ் இயந்திரங்கள் உள்ளன. மாணவர்களுக்கு தரமான யூனிஃபார்ம், ஷூ வழங்குகிறோம். எல்லாமே நண் பர்கள் உதவிதான். இவர்களில் பலரை ஒருமுறைகூட நேரில் பார்த்தது இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக 30 கம்ப்யூட்டர்களுடன் கூடிய மிக நவீன ஆய்வகத்தை அமைத்துள்ளோம். ஏற்கெனவே அரசு வழங்கிய 6 கம்ப் யூட்டர்கள் இருந்தன. தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 24 கம்ப்யூட்டர்கள், 48 நாற்காலிகள், 24 மேசைகள், 3 இன்வெர்ட்டர்கள் வழங்கினார்கள். இன் டர்நெட் வசதியும் கிடைத்தது. மிகப் பெரும் தனியார் பொறியியல் கல்லூரி களில் உள்ளது போல மிக நவீன தோற்றத்துடன் கம்ப்யூட்டர் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.

கீழப்பாலையூர் பள்ளியில் உள்ள வசதிகளை இவ்வாறு வசந்தன் வரிசைப் படுத்திக்கொண்டே செல்கிறார்.

இந்தப் பள்ளியை இவ்வாறு மேம் படுத்த தனது தலைமையாசிரியர் கே.தரணி, சக ஆசிரியர்கள், ஊர்ப் பொது மக்கள் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் தான் முக்கிய காரணம் என அவர் தெரிவிக்கிறார்.

இதுபற்றி தெரிவித்த தலைமை யாசிரியர் கே.தரணி, “அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அதற்கு எங்கள் பள்ளியே சாட்சி” என்றார்.



பள்ளியில் உள்ள ஹைடெக் டாய்லெட். | ஆசிரியர் ப.வசந்தன்
இந்த சூழலில் சி.கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வசந்தன் இடமாறுதலில் சென்றுள்ளார். தலைமை யாசிரியர் தரணியும் வேறு பள்ளிக்கு இடமாறுதலில் சென்றுள்ளார்.

“கீழப்பாலையூர் பள்ளி தன்னிறைவு பெற்று விட்டது. இதுபோல மேலும் பல பள்ளிகளை உருவாக்க வேண்டும். அதுவே எனது கனவு. அதனாலேயே இடமாறுதலில் சென்றுள்ளேன்” என் கிறார் வசந்தன்.

இதற்கிடையே கீழப்பாலையூர் பள்ளியின் புதிய தலைமை ஆசிரிய ராக எஸ்.குழந்தை தெரஸ் பொறுப் பேற்றுள்ளார். இவர் இந்த பள்ளிக்கு வந்து 3 நாட்கள்தான் ஆகிறது. “கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வேறு எங்குமே இல்லாத பல அதி நவீன வசதிகள் கீழப்பாலையூரில் உள்ளன. எனக்கு முன்பு பணியாற்றிய தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இதனை ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்கியுள்ளனர். எனது பதவி காலத்தில் மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை வளர்க்க அதிக கவனம் செலுத்தவுள்ளேன்” என்றார்.

ஆசிரியர்கள் நினைத்தால் அரசுப் பள்ளிகளை எந்த உச்சத்துக்கும் உயர்த்த முடியும். அதற்கு கீழப்பாலையூர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad