2வது அரை இறுதியில் இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்
பர்மிங்காம்: மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியுடன் வங்கதேசம் மோதுகிறது. லீக் சுற்றின் முடிவில் பி பிரிவில் முதலிடம் பிடித்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி (4 புள்ளி), ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த வங்கதேசத்தை அரை இறுதியில் சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அடுத்து இலங்கையுடன் நடந்த போட்டியில் கடினமான இலக்கை நிர்ணயித்தாலும் பந்துவீச்சு எடுபடாததால் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள், ஒருங்கிணைந்து விளையாடி வெற்றியை வசப்படுத்தினர்.
பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதுடன், துடிப்பான பீல்டிங்கும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, அதிரடி வீரர்கள் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர் இருவரையும் அடுத்தடுத்து ரன் அவுட் செய்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது. ரோகித், தவான், கோஹ்லி, யுவராஜ், டோனி, ஹர்திக், ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இவர்களைக் கட்டுப்படுத்துவது வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாகவே இருக்கும். புவனேஷ்வர், பூம்ரா, ஹர்திக் வேகம் மற்றும் அஷ்வின் - ஜடேஜா சுழல் கூட்டணி தாக்குதலை சமாளிப்பதும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் தான். 2015 உலக கோப்பை ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த போட்டி மற்றும் கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த ஐசிசி உலக டி20 ஆட்டத்தில் மோதியபோது இரு அணி வீரர்களுக்கும் இடையே சற்று உரசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்தியா - வங்கதேசம் மோதும் ஆட்டங்கள் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அணிகளின் தற்போதைய பார்ம் மற்றும் வலிமையின் அடிப்படையில் இந்தியாவின் கை ஓங்கி இருந்தாலும், கடைசி வரை போராட வங்கதேச வீரர்கள் கொஞ்சமும் சளைப்பதில்லை என்பதால் அவர்களை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்பதை கோஹ்லி & கோ உணர்ந்துள்ளது. நடப்பு தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 266 ரன் கடின இலக்கை சேஸ் செய்தது, வங்கதேச வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன், மகமதுல்லா இருவரும் சதம் விளாசி அசத்தினர். தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சவும்யா சர்க்கார் ஜோடியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மோர்டசா, முஷ்டாபிசுர், தஸ்கின் அகமது வேகமும், ஷாகிப் - மொசாடெக் சுழலும் இந்திய பேட்ஸ்மென்களை சோதிக்க காத்திருக்கின்றன. இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் உறுதியுடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, எம்.எஸ்.டோனி, யுவராஜ் சிங், மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா.
வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், சவும்யா சர்க்கார், சப்பிர் ரகுமான், மகமதுல்லா ரியாத், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம், ருபெல் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், தஷ்கின் அகமது, மெகதி ஹசன் மிராஸ், மொசாடெக் உசேன், சன்சமுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம்.
ஐசிசி தொடர்களில் நேருக்கு நேர்...
2007 உலக கோப்பை (50 ஓவர்): வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2009 உலக கோப்பை டி20: இந்தியா 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
2011 உலக கோப்பை (50 ஓவர்): இந்தியா 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
2014 உலக கோப்பை டி20: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2015 உலக கோப்பை (50 ஓவர்): இந்தியா 109 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
2016 உலக கோப்பை டி20: இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
யுவராஜ் 300:
இந்திய அணி அனுபவ ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் (35 வயது), இன்று தனது 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். இந்த சாதனை மைல்கல்லை எட்டும் 5வது இந்திய வீரர் என்ற பெருமை யுவராஜுக்கு கிடைத்துள்ளது. சச்சின் (463), டிராவிட் (344), அசாருதீன் (334), கங்குலி (311) ஆகியோர் இந்த பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். இதுவரை 299 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள யுவராஜ் 8,622 ரன் (அதிகம் 150, சதம் 17, அரை சதம் 52) விளாசி உள்ளார்.