2 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி, டிரம்புடன் 26–ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி, டிரம்புடன் 26–ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டிரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 20–ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி 3 தடவை தொலைபேசியில் பேசி இருக்கிறார். ஆனால், நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.
இருநாட்டு உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்கிறார்.
அமெரிக்கா பயணம்
மோடியின் அமெரிக்க பயணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஜூன் 25 மற்றும் 26–ந் தேதிகளில் அவர் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு 26–ந் தேதி, டொனால்டு டிரம்புடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தை, பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆழ்ந்த இருதரப்பு உறவுக்கான புதிய திசையை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தெற்கு ஆசியாவில் இந்தியா–அமெரிக்கா நலன் சார்ந்த பிரச்சினைகள், எச்1பி விசா, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாக கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு முழுமையாக உடன்படுவதாக இந்தியா அறிவித்தது. இந்த சூழ்நிலையில், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.