இன்னும் 2 மாதத்தில் தேர்தல் : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு
நாகை : இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நாகை மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: தற்போது நடந்து வரும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. 90 சதவீத தொண்டர்கள் நம்பக்கம்தான் உள்ளனர். 122 எம்எல்ஏக்களை கையில் வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நடத்தி விடலாம் என நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்ட லட்சிய பாதையில் இருந்து தடம்புரண்டு கொண்டிருக்கிறார்கள். எந்த குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என ஜெயலலிதா விரும்பினாரோ அது நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது.
எனவே சிபிஐ விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதையும் அந்த பினாமி ஆட்சி கேட்கவில்லை. இந்த நிலை நீடித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். பொதுச்செயலாளரை தேர்தல் வைத்துதான் தேர்வு செய்ய வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தது தவறானது என்று தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை கூறியுள்ளது. கட்சியும், இரட்டை இலை சின்னமும் நம்மிடம் வந்து சேரும். அதிமுக நாம் தான் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதன் பின்னர் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முறையாக தேர்தல் நடக்கும். இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள். இது மக்களின் எதிர்பார்ப்பு. உரிய நேரத்தில் தேர்தல் நடந்தால்தான், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.