கடைசி ஓவர்களில் கலங்கிய இந்தியா! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்!
இன்றைக்கு இத்தனை கேமராக்கள், தேர்ட் அம்பயர், உடனடி அனாலிஸிஸ் என்று பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ள கிரிக்கெட்டின், இந்த மாற்றங்களுக்கான ஒரு புள்ளியாக அமைந்தது 1987 உலகக்கோப்பை. அதைப் பற்றிய ஒரு ரீவைண்ட்!
பாகம் 1
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டுமுறை மோதவேண்டும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும். ஏ பிரிவில் நடந்த ஆட்டங்களில் பெரிய சர்ப்ரைஸ் என்று எதுவும் இல்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சமபலம் வாய்ந்த அணிகள். நியூசிலாந்து இந்த இரண்டு அணிகளையும் விட பலம் குறைந்த அணி. ஜிம்பாப்வே மூன்றையும் விட பலம் குறைவு. ஜிம்பாப்வே அணிதான் விளையாடிய எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து, ஜிம்பாப்வேயுடன் மற்றும் வெற்றி பெற்று ஆறுதல் பட்டுக்கொண்டது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தங்களுக்கிடையேயான போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றியைப் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவிற்கு முதலிடமும் ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாம் இடமும் கிடைத்தது.
’பி’ பிரிவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மூன்றும் சமபலத்தில் இருந்தன. இலங்கை மட்டும் அவர்களோடு ஒப்பிட்டால் சுமாரான அணி. எனவேதான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. சென்றமுறை கோப்பையைத் தவறவிட்டதால் இந்தமுறை கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் இலங்கையை இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை ஒரு போட்டியிலும் மட்டும் வென்று டோர்ணமெண்டை விட்டு வெளியேறியது. இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள், இலங்கை இரண்டையும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. பாகிஸ்தானிடம் இரண்டு போட்டிகளிலும் தோற்று இரண்டாம் இடம் பெற்றது. பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகளிடம் ஒரு போட்டியில் மற்றும் தோற்று மீதமிருந்த ஐந்து போட்டிகளையும் வென்று முதலிடம் பிடித்தது.
இந்த லீக் பிரிவு ஆட்டங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் எதிர்பார்த்த முடிவுகளே கிடைத்தது. பெரிய அளவில் பரபரப்பான ஆட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் நான்கைந்து ஆட்டங்கள் மட்டுமே. மொத்த லீக் ஆட்டங்களிலும் சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுமே ஒரே ஒரு முறை 300 ரன்களைக் கடந்தது. அதுகூட மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸின் தனிப்பட்ட திறமையால். அவர் 183 ரன்களைக் குவித்தார்.
Viv Richards
இரண்டு நாட்டிலும் இருந்த ஆடுகளங்கள் எல்லாமே பேட்டிங்கிற்கு சாதகமானவையே.ஆஸ்திரேலிய மைதானங்கள்போல் பரந்து விரிந்தவையும் அல்ல. ஒப்பீட்டளவில் சிறிய மைதானங்களே. பீல்டிங்கும் இப்போது இருப்பது போல எந்த அணியிலும் சிறப்பானதாக இல்லை. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மட்டும் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்கும். பளீரென்ற வெள்ளைச் சீருடையில் பீல்டிங் செய்ய இறங்கும் ஆட்டக்காரர்களில் பலர் மடிப்புக் கலையாமல்,துளி அழுக்குப்படாமல் ஆட்டம் முடிந்து வந்ததும் உண்டு.
ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், இந்தியாவின் முகமது அசாருதீன், இலங்கையின் ரோஷன் மகனாமா, பாகிஸ்தானின் சலீம் மாலிக், மேற்கிந்திய தீவுகளின் ரோஜர் ஹார்பர் ஆகியோரே சிறந்த பீல்டர்களாக அப்போது அறியப்பட்டு இருந்தார்கள். இப்போதைய அணிகளின் பீல்டிங் தரத்துடன் 1987 அணிகளின் பீல்டிங் தரத்தை ஒப்பிட்டால் குறைந்தது 30 முதல் 40 ரன்கள் வரை அப்போதைய பீல்டர்கள் அதிகம் கொடுத்ததாகவே எடுத்துக் கொள்ளலாம். தங்கள் கைகளுக்கு பந்து வந்தால் மட்டுமே பீல்டிங் செய்ய வேண்டும் சில அங்குலம் தள்ளிப் போனாலும் குனிந்தோ,விழுந்தோ பிடிக்கக் கூடாது, அப்படிப் பிடித்தால் உங்கள் மண்டை ஆயிரம் சுக்கல்களாய் வெடித்துச் சிதறிவிடும் என ஏதோ ஒரு வேதாளம் சாபம் கொடுத்திருப்பது போலவே நடந்து கொள்வார்கள். தங்களைக் கடந்து போகும் பந்தை பழைய காதல் பாடல்களில் ஹீரோயினை ஸ்லோ மோஷனில் ஹீரோ துரத்திப் போவதைப் போலவே ஓடுவார்கள்.
| 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். |
அடுத்த உலக கோப்பையான 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். பாயிண்ட் திசையில் நின்று ஒற்றை ஆளாக மேட்சுக்கு 30 ரன்கள் வரை எதிரணி எடுப்பதை அவர் தடுத்ததைப் பார்த்துதான் கிரிக்கெட் உலகமே சரியாக பீல்டிங் பண்ணாதவர் நல்ல பிளேயர் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்தது. அதற்கு முன் வரை, பிரபல ஆட்டக்காரர்கள் பீல்டிங் பிராக்டீஸ்க்கு வருவதைக் கூட கௌரவக் குறைவாக எண்ணிய காலம் கூட உண்டு. எனவே நல்ல பேட்டிங் பிட்ச், சிறிய மைதானம், சராசரியான பீல்டிங், கம்ப்யூட்டரில் அனலைஸ் செய்து பேட்ஸ்மெனின் வீக்னெஸை கணித்து அதற்கு ஏற்ப பந்து வீசாத பவுலர்கள். இத்தனை அட்வாண்டேஜ் இருந்தும் 250ஐயே எல்லா அணிகளும் தங்களின் டார்கெட்டாக வைத்திருந்தன.
கோவில்களில் யானை ஓரிருமாதக் குட்டியாக இருக்கும் போது சின்ன சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள். அப்போது அதனால் அதனால் விடுபட முடியாது. யானை நன்கு வளர்ந்த பின்னும் அதே சங்கிலியால்தான் கட்டி இருப்பார்கள். ஆனால் சங்கிலியில் இருந்து விடுபடும் முயற்சியை யானை கைவிட்டு இருக்கும். அந்தச் சங்கிலியில் இருந்து விடுபட அந்த மனத்தடையை உடைக்க வேண்டும்.
1970களில் ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து 200 ரன்கள் என்பது மரியாதைக்குரிய இலக்காக ஆட்டக்காரர்கள் மனதில் இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறு 80களின் மத்தியில் 250 ஆனது. ஸ்ரீகாந்த், கிரேட் பாட்ச் போன்ற ஆட்டக்காரர்கள் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க ஆரம்பித்து, பின்னர் 96ல் ஜெயசூர்யா, கலுவித்தரன இணை துவக்கத்தில் அதிரடியாக ஆடி, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் 300 ரன்கள் என்பது ஆட்டக்காரர்களுக்கு ஒரு மனத்தடையாகவே இருக்கிறது.
லீக் முடிந்த நிலையில் முதல் அரை இறுதி ஆட்டம் பி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தானுக்கும் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. அடுத்த அரை இறுதி ஆட்டம் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்திருந்த இந்தியாவிற்கும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த இங்கிலாந்திற்கும் இடையே அப்போதைய பம்பாயில்.
இறுதிப்போட்டி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்தது. அரை இறுதிப் போட்டிகள் தொடங்கும் முன்னரே இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்று ஈடன் கார்டனில் மோதுவார்கள் என இரண்டு நாட்டினருமே எதிர்பார்த்திருந்தார்கள். கல்கத்தாவில் போட்டிக்கான டிக்கெட்டுகள் புயல் வேகத்தில் விற்றுத்தீர்ந்தன.
முதல் அரை இறுதி ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆலன் பார்டர் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 84ஆம் ஆண்டு வரை டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், கிரேக் சாப்பல், இயன் சாப்பல் என ஜாம்பவான்களுடன் இருந்து வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அவர்கள் ஓய்வு பெற்றதும் சிக்கல் தொடங்கியது. ஆலன் பார்டர் மட்டும்தான் அந்த பழைய அணியில் அதிக நாள் ஆடியவர். மற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ளவர்கள். புது முகங்களால் ஆன அணியை பார்டர் வழிநடத்திக் கொண்டு இருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் பூன் மற்றும் மார்ஷ் ஓரளவு அனுபவமுள்ளவர்கள், ஸ்டீவ் வாவ், டீன் ஜோன்ஸ், ஓடோனில் என துடிப்பான இளைஞர்கள் அணியில் இருந்தார்கள். மெக்டர்மெட் மற்றும் ரீட் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொண்டார்கள்.
ஆட்டம் பாகிஸ்தானில் நடப்பதாலும், இம்ரான்கான், மியாண்டாட், வாசிம் அக்ரம், அப்துல் காதிர் போன்ற பாகிஸ்தானின் ஆல் டைம் லெவன் எடுத்தால் அன்னபோஸ்டாக இடம் பெறுகிற பிளேயர்கள் இருந்ததாலும் பாகிஸ்தான் தான் ஜெயிப்பார்கள் என்று இந்தியாவே நம்பியது. போதாக்குறைக்கு சலிம் மாலிக், இஜாஸ் அகமது, ரமீஸ் ராஜா போன்ற கன்சிஸ்டெண்டான ஆட்டக்காரர்கள் வேறு.
ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் கொடுக்க அந்த அணி 267 ரன்களை எடுத்தது. அப்போது குவித்தது என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் 250 தானே மக்கள் மனதில் இருக்கும் டார்கெட். பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கியது. முப்பத்தெட்டு ரன்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. களத்தில் மியாண்டாட் நிற்க இறங்கினார் கேப்டன் இம்ரான்கான். இந்த உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்திகள் வேறு வந்திருந்தது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையில் அலன் பார்டர், இம்ரானின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை அளித்தார். இது இவரின் கடைசிப் போட்டியாக இருந்து விடுமோ என்று பலரும் பதைபதைத்தாலும், மியாண்டாட் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் மெக்டர்மெட் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் அணியை வெற்றிபெற வைத்தார். பாகிஸ்தானில் கலவரம் ஏற்படாத குறைதான்.
ஆனால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இங்கிலாந்தை ஜெயித்து விடலாம். நாம் ஏற்கனவே வென்றிருந்த ஆஸ்திரேலியாதான் பைனலுக்கு. எளிதில் வென்று விடலாம் என மகிழ்ச்சியுடன் தூங்கப் போனார்கள் அடுத்த நாள் ஆட்டத்தைப் பற்றிய பெருங்கனவுகளோடு.
அடுத்த நாளும் வந்தது. இந்தியா டாஸ் ஜெயித்து பீல்டிங் கேட்டது. முதல் இரண்டு விக்கெட்டுகள் 80 ரன்களுக்குள் போக, கேப்டன் கேட்டிங் உள்ளே வந்து துவக்க ஆட்டக்காரர் கிரஹாம் கூச்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி ஸ்கோரை 200 வரை கொண்டு போனது. பின்னர் வந்த லாம்ப் ஆடி 254க்கு எண்ணிக்கையை கொண்டு சென்றார். எளிதான இலக்குதான்.
கவாஸ்கர், ஸ்ரீகாந்த், சித்து, அசாருதீன் ,ரவி சாஸ்திரி, கபில்தேவ் என எல்லோருமே பார்மில் வேறு இருந்தார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வித்தை காட்ட முடியாத ஆடுகளம் வேறு. சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்புரி இருந்தாலும் அவரை அனாயாசமாக ஆடுபவர்கள் நம் ஆட்டக்காரர்கள். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் 40 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. வெறும் 53 ரன்கள் தான் தேவை. 10 ஓவர்கள் 5 விக்கெட் கைவசம். இருந்தும் 219 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது இந்தியா. கடைசி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் பாகிஸ்தான் சோகக்கடலில் மூழ்கியது என்றால் அடுத்த நாள் இந்தியா.
இந்த மேட்ச் என்றில்லை. இந்தியா 80களிலும் 90களிலும் ஆடிய பல மேட்சுகளில் கடைசி விக்கெட்டுகளை 15 ரன்னுக்கு 20 ரன்னுக்கு இழந்து தோற்றது உண்டு. கையில் இருக்கும் நகங்கள் எல்லாம் பத்தாமல் கால் விரல் நகங்களையும் கடிக்கும் அளவிற்கு டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் இந்திய கடைசி வரிசை ஆட்டக்காரர்கள். அதனால் தான் மகேந்திர சிங் தோனி கடைசி கட்டத்தில் மேட்சுகளை வெற்றிபெற்றுத்தருவதால் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஆளாக மாறியிருக்கிறார்.