இன்று முதல் நாடு முழுவதும் தினசரி விலை நிர்ணயம் பெட்ரோல் 1.12 டீசல் 1.24 குறைப்பு
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் முறை, நாடு முழுவதும் இன்று அமலாகிறது. அன்றைய விலை விவரம் தினமும் காலை 6 மணிக்கு பங்க்குகளில் மாற்றம் செய்யப்படும். புதிய நடைமுறையின் முதல் நாளான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 1.12, டீசல் 1.24 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02க்கும், டீசல் 57.41க்கும் விற்பனை செய்யப்படும். காலை 6 மணியில் இருந்து இந்த விலை அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி செலவு, இறக்குமதி மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. 2010ம் ஆண்டில் இருந்து பெட்ரோல் விலையும், 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டீசல் விலையும் சந்தை விலைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வரும்போது, அதிக அளவில் உயர்த்தியதுபோல் தெரிகிறது. விலை உயர்வு வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு பதிலாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யும் முறை பரிசோதனை முயற்சியாக புதுச்சேரி, ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம், ராஜஸ்தானில் உதய்ப்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகாரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு நாடு முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. முதலில், நள்ளிரவு 12 மணிக்கு புதிய விலையை பங்க்குகளில் மாற்றம் செய்வது எனவும், அதற்கு முன்னதாக முந்தைய நாள் இரவு 8 மணிக்கு டீலர்களுக்கு தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது நடைமுறை சாத்தியமற்றது என எதிர்ப்பு தெரிவித்த பங்க் உரிமையாளர்கள், 16ம் தேதி முதல் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். பின்னர், நள்ளிரவுக்கு பதிலாக தினமும் காலை 6 மணிக்கு விலை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று முதல் தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசலுக்கான அன்றைய விலை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய நடைமுறை தொடங்குவதற்கு முன்பு, மாதத்துக்கு 2 முறை மாற்றம் செய்யப்படும் வழக்கத்தின் கடைசி நாளான நேற்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 1.12, டீசல் 1.24 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02க்கும், டீசல் 57.41க்கும் விற்பனை செய்யப்படும். டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.48க்கும், டீசல் 54.49க்கும் காலை 6 மணி முதல் புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது. நாளை காலை 6 மணி வரை இது அமலில் இருக்கும். கடைசியாக, கடந்த மாதம் 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.23, டீசல் 89 காசுகள் உயர்த்தப்பட்டது.
விலை விவரம் தெரிந்து கொள்வது எப்படி?
பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் அன்றைய விலையை அறிந்து கொள்ளலாம். இது தவிர, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் fuel@IOC என்ற மொபைல் ஆப்மூலம் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளலாம். RSPDEALER CODE என 92249 92249 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாலும் விலை விவரம் மொபைலுக்கு அனுப்பப்படும் என எண்ணெய் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 26,000 டீலர்கள் உள்ளனர். இவர்கள் அந்தந்த பங்க்குகளில் விலை மாற்றம் செய்வார்கள். இந்த நிறுவனத்துக்கு 10,000 நேரடி விற்பனை நிலையங்கள் உள்ளன.அங்கு மைய சர்வரில் மேற்கொள்ளும் மாற்றத்துக்கு ஏற்ப தானாகவே பங்க்குகளில் விலை மாற்றப்படும். மேலும், டீலர்கள் வசதி மற்றும் நடைமுறை சிக்கல்களை தீர்க்க நாடு முழுவதும் 87 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் விற்பனை பிரிவு அதிகாரிகள் விலை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களை நிர்வகிக்க மும்பையில் உள்ள மார்க்கெட்டிங் பிரிவு தலைமை தலைமை அலுவலகத்தில் பிரதான கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 450 விற்பனை பிரிவு அலுவலகங்களில் உள்ளவர்கள், தினசரி விலை நிர்ணய முறையை சிக்கலின்றி நடைமுறைப்படுத்த டீலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.