சொந்த மண்ணில் 100 மீ. ஓட்டம்: வெற்றியுடன் விடைபெற்றார் தடகள மன்னன் போல்ட்
கிங்ஸ்டன்:
உலகின் அதிவேக மனிதராக 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசேன் போல்ட், சொந்த மண்ணில் பங்கேற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அபாரமாக வென்று அசத்தினார். பெய்ஜிங் (2008), லண்டன் (2012), ரியோ (2016) என தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று மகத்தான சாதனை வீரராக முத்திரை பதித்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் (30 வயது), சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். லண்டனில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரே அவரது கடைசி போட்டியாக இருக்கும்.
அதிலும் அவர் 100 மீட்டர் பந்தயத்தில் மட்டுமே கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இந்த பிரிவில் அவர் 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக சொந்த ஊரான கிங்ஸ்டனில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 30,000 ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரிக்க, அபாரமாக ஓடிய போல்ட் 10.03 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டியன் கோ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, போல்ட்டுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். சக வீரர் நெஸ்டா கார்ட்டா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், போல்ட் வென்ற 9 தங்கப் பதக்கங்களில் ஒன்று திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.