‘பாகுபலி’ உருவான நேரத்தில் கையில் பணமில்லாமல் தவித்த பிரபாஸ்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் இதுவரையில் ரூ.600 கோடியை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பெரும் பணக்கஷ்டத்தில் இருந்ததாக இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கு பிரபாஸுக்கு சம்பளமாக ரூ.20 கோடி கொடுத்தார்களாம். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வேறு வேறு படங்களில் நடித்தார்களே தவிர, பிரபாஸ் மட்டும் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளாமல் ‘பாகுபலி’க்காக காத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஒருமுறை பிரபாஸுக்கு பணக்கஷ்டம் வந்துவிட்டதாம். இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில தயாரிப்பாளர்கள் அவர்களிடம் கால்ஷீட் வாங்குவதற்காக பணத்தோடு அவரது வீட்டில் போய் நின்றுள்ளார்கள். சிலர், பணத்தை கொடுத்த உதவியாக கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
அப்போது, பிரபாஸ் ராஜமௌலியை தொடர்புகொண்டு என்ன செய்யவென்று கேட்க, அப்படி பணம் கொடுக்க வருபவர்களிடம் பணத்தை கடனாக வாங்கிக் கொள், படத்தின் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பின்னர் அவர்களுக்கு திருப்பி கொடுத்துவிடு என்று அறிவுரை கூறியுள்ளார். ரூ.10 கோடி ரூபாய்க்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பைவிட பாகுபலிக்காக நடிக்க மறுத்துவிட்ட பிரபாஸின் அர்ப்பணிப்பு தன்னை வியக்க வைத்துவிட்டதாக ராஜமௌலி கூறியுள்ளார்.