புகையிலை விளைந்த நிலத்தில் இயற்கை விவசாயம்... சாதித்த தமிழக விவசாயி!




கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புகையிலை சாகுபடி செய்து வருகின்றனர்.  புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற நச்சுப்பொருள் தாக்கி புற்றுநோய்க்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.  இதனால் புகையிலை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. புகையிலை சாகுபடியை கைவிட்ட நிலத்தில் வேறு எதையும் சாகுபடி செய்யமுடியாமல் தரிசாகப் போட்டுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் முதல் முதலாய் இயற்கை விவசாய முறையில் மிளகாய் மற்றும் பலவகை காய்கனிகள் பயிரிட்டு நிகர இலாபம் அடைவதோடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் மாறி இருக்கிறார்.

ஆயக்காரன்புலம்-2 என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜசேகர். ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்.  இவரும், இவர் மனைவி கனிமொழியும் தங்களுடைய 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் கலப்பிண சாகுபடி செய்கிறார்கள். எவ்வித ரசாயன மருந்தும், பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தாமல் மிளகாய், கத்தரி, வெண்டை, பாகல், பரங்கி, புடலை, சோளம், கம்பு என வகை வகையாய் பயிர்செய்து வருகிறார்கள்.



விவசாயம்

“அப்பா ஆசிரியராக இருந்தபோதும் எல்லோரையும்போல புகையிலை சாகுபடி செய்துவந்தாங்க, அவங்க மறைவுக்கு பின்தான் நான் விவசாயத்தை நேரடியாக கவனித்தேன். புகையிலைக்கு முக்கியத் தேவையே தடைசெய்யப்பட்ட ‘என்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்தும், அதிக விஷத்தன்மையுள்ள களைக்கொல்லி மருந்தும்தான். இது மண்ணில் உள்ள நன்மைசெய்யும் பாக்டீரியாவையும் அழித்துவிடும். மண்ணுக்கும் கேடு, அதில் பணியாற்றும் மனிதருக்கும் கேடு. எனவே, விஷச்செடியான புகையிலையை உற்பத்தி செய்ய பிடிக்கல. அதே நேரத்தில நிலத்தையும் தரிசா போடக்கூடாதன்னு நினைச்சேன். ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்ய முடிவெடுத்தேன்.

முதலில் புகையிலையால் விஷமேறிக் கிடந்த மண்ணை மாற்றினேன். ஒன்றரை அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி அப்புறப் படுத்தினேன். மாட்டு சாணத்துடன், மண்புழு உரம் மற்றும் நுண்ணுயிரி கலந்து நிலம் முழுவதும் தூவினேன். காலம் காலமாய் கத்தரி சாகுபடி செய்வதால் கத்தலிப்புலம் என்ற பெயர்பெற்ற ஊரில் போய் கொத்துகத்தரி விதைவாங்கி சாகுபடி செய்தேன். இதற்கு பயன்படுத்தும் மாட்டு சாணம்கூட ரசாயன கலப்பின்றி இருக்கவேண்டும் என்பதற்காக மாட்டுத்தீவனம் கொடுத்து வளர்க்கப்படும் ஜெர்சி மாட்டு சாணம் வாங்காமல் மேலமருதூர் சென்று நாட்டுமாட்டு சாணம் ஒரு லாரி ரூ.6500 கொடுத்து வாங்கி  பயன்படுத்தினேன். இயற்கை முறையில் நானே பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்தேன். ஏக்கருக்கு, அரைக்கிலோ இஞ்சி, அரைக்கிலோ பூண்டு, கால்கிலோ மிளகாய் இவற்றைச் சேர்த்து அரைத்து 5 லிட்டர் நீரில் கரைத்து அதைக்கொண்டு ஏக்கருக்கு 5 டேங்க் ஸ்பிரே செய்தேன்.

மறுமுறை மாட்டுக் கோமியத்துடன் தயிர் கலந்தும் ஸ்பிரே செய்தேன். மேலும், பழைய பெயிண்ட் டப்பாக்களை வாங்கி, அதில் மஞ்சள் பெயிண்ட் அடித்து விளக்கெண்ணையைத் தடவி வயலில் ஆங்காங்கே நட்டு வைத்தேன். இனக்கவர்ச்சிபொறி எனப்படும் இதில் இலைகளை சுருட்டும் தாய் அந்துப்பூச்சிகள் வந்து ஒட்டிக்கொண்டு இறந்துவிடும். வெயிலால் பயிர் கருகாமல் இருக்க, 3 லிட்டர் தயிருடன் 5 கிலோ சாணம் சேர்த்து கலந்து 5 நாள் ஊறவைத்து அதன்பின் 12 லிட்டர் தண்ணீருடன் கலந்து 10 டேங்க் ஸ்பிரே செய்தேன். கத்தரி விளைச்சல் அமோகமாக இருந்தது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தினால்தான் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு. புகையிலை சாகுபடிசெய்து வரும் லாபத்தைவிட இதில் இருமடங்கு லாபம் கிடைத்தது. தற்போது, நாட்டுமிளகாய் சாகுபடி செய்துள்ளேன். இதில் காரத்தன்மை அதிகம். இதனை பிரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் ஒரு வாரத்துக்கு வீணாகாமல் இருக்கும். மிளகாயுடன் மற்ற காய்கறிகளையும் பயிர் செய்கிறேன். மண்ணு நல்லாயிருக்கு, அதில் விளையிற காய்களும் நல்லாயிருக்கு. அதை மக்களுக்கு கொடுக்கும்போது நல்ல தொழில் செய்யுறோம் என்ற மனநிறைவு இருக்கு” என்றார் இராஜசேகர்.

இயற்கை விவசாயம்

விவசாயம் பற்றி நம்மாழ்வார் சொன்னவை

தொடர்ந்தார் இராஜசேகர் மனைவி கனிமொழி, “நானும் விவசாயக் குடும்பத்திலேந்து வந்தவள்தான். என்கணவர் இயற்கை விவசாயத்தைப்பற்றி சொல்லச் சொல்ல இத்தனை நாள் நானும் விஷம் கலந்த காய்கறியை சாப்பிட்டு வந்திருக்கோம்ன்னு தெரிஞ்சது. நம்ம நிலத்துல ரசாயன கலப்பில்லாத நல்ல காய்கறியை பயிர்செஞ்சி கொடுப்போம்முன்னு முடிவு செஞ்சோம். வீட்டுவேலை நேரம்போக நாள் முழுதும் தோட்டவேலைதான். காய் பறிக்கக்கூட பிளாஸ்டிக் பயன்படுத்தாம, பனைஓலைக்கூடைதான் பயன்படுத்துறோம். வீட்டுக்கு வாங்கும் பால்கூட ஜெர்சி மாட்டுப்பால வாங்காம நாட்டுமாட்டுப் பால்தான் வாங்குறேன். அந்தளவுக்கு இயற்கைக்கு மாறிட்டோம். எங்களைப்போல மற்றவர்களும் மாறினால் நாட்டுக்கே நல்ல காய்கறிகளைக் கொடுக்கலாம். அதேநேரத்துல உழைப்புக்கு ஏத்த லாபமும் இருக்கு. ஹோட்டல்கள், இயற்கை விவசாயம் பற்றி தெரிஞ்சவங்க, அதிலுள்ள நன்மையை அறிஞ்சவங்க எல்லாம் வீடுதேடி வந்து காய்கறிகளை வாங்கிட்டுப்போறாங்க. இடைத்தரகர் கமிஷன் இல்லாததால கடைவிலையைவிட கிலோவுக்கு 5 ரூபாய், 10 ரூபாய் விலை குறைத்தே தர்றோம். சந்தோஷமா வாங்கிட்டுப்போறாங்க” என்றார்.

இறுதியாய் இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் சொல்வது இதுதான், “புகையிலை சாகுபடி செய்யுறவங்களுக்கும், சாகுபடியை கைவிட்டு நிலத்தை தரிசாபோட்டு வச்சிருக்கவங்களுக்கும் அரசு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தனும்.  இதுபோல இயற்கை விவசாயம் செய்ய முன்வருவோருக்கு எங்களுத்தெரிந்த எல்லா ஆலோசனைகளையும் சொல்லத் தயாரா இருக்கோம்.  இந்த சாகுபடிக்கு அரசு மானியத்துடன் வங்கிக் கடனும், விவசாயத்துறையின் வழிகாட்டுதலும் கிடைத்தால் மேலும் சிறப்பாக செய்ய முடியும்.  மண்ணையும், மக்களையும் காக்க அரசு முன்வரவேண்டும்” என்றார்கள்.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad