சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?





சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!

* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.

* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.

* வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

* சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படும். அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

* வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.

* கிராமப்புறங்களில் சுக்கு காபி குடிப்பது வழக்கம். சுக்கு காபி என்றதும் பலர் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இன்னும் சிலர் தேயிலை, பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது சரியான முறையல்ல. சுக்கு காபி என்றால் அதனுடன் மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஒரு மடங்கு மிளகு என்றால் அதைவிட 2 மடங்கு சுக்கு, 4 மடங்கு கொத்தமல்லி (தனியா), 10, 12 ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் நம் தேவைக்கேற்றார்போல ஒன்றிரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.

* தினமும் பகல் வேளை உணவின்போது ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.

தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் சொல்லியிருக்கிறார்... ‘சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad