‘காதலியை திருமணம் செய்ய அனுமதி வாங்கி தாங்க ஜி’
சண்டிகர்: தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று தரும்படி பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பகுதி மற்றும் தனிப்பிரிவு இயங்கி வருகின்றது. ஏராளமானோர் தங்களது குறைகளை மனுக்களாக இங்கு அனுப்பி வைப்பார்கள். இந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும். இங்கு வரும் மனுக்களில் சுமார் 60 சதவீதம் மனுக்கள் வேடிக்கையான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ள மனுக்களாக தான் இருக்கும்.
மாதந்தோறும் சுமார் 400 மனுக்கள் பிரதமர் அலுவலக குறைத்தீர்ப்பு பிரிவு பகுதிக்கு வருகின்றன. இவை ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நகரங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு பிரதமர் மோடி உதவ செய்ய வேண்டும் என கோரி சண்டிகரை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜியரிங் மாணவர் கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில் அந்த மாணவர் கூறியிருப்பதாவது, “நான் நர்சாக பணிபுரியும் இளம்பெண் ஒருவரை காதலித்து வருகின்றேன். எனது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தன்னார்வலர் ஒருவரை அனுப்பி எனது பெற்றோர், இளம்பெண்ணின் பெற்றோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் ஒருவர் தனது தோட்டத்தில் பூக்கும் பூக்களை அனுமதியின்றி மற்றவர்கள் பறித்து விடுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அனுப்பிய சம்பங்களும் நிகழ்ந்துள்ளன.