சிக்கலில் சந்தானம்; நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
விஜய்டிவி லொல்லுசபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் படம் “தில்லுக்கு துட்டு”. இப்படத்திற்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் முகமது மஸ்தான் என்பவர் “தில்லுக்கு துட்டு” படம் வெளியாவதற்கு தடை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “ எங்கள் நிறுவனம் சார்பில் ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க திட்டமிட்டு, அதன் இயக்குநராக ராம்பாலா நியமிக்கப்பட்டார். இப்படத்துக்காக ரூ.81 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால், உரிய காரணத்தை தெரிவிக்காமல் படம் எடுப்பதை இயக்குநர் ராம்பாலா தவிர்த்தார்.
இந்நிலையில் இயக்குநர் ராம்பாலா ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் நடிகர் சந்தானத்தைப் போட்டு படமாக எடுத்துள்ளார். இப்படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே ‘தில்லுக்கு துட்டு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்காக நடிகர் சந்தானம் மற்றும் இப்படத்தின் இயக்குநர் ராம்பாலா ஆகிய இருவரையும் வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்ற நீதிபதி கணபதிசாமி உத்தரவிட்டுள்ளார்.