போன் அழைப்பில் தடங்கலா? ரேட்டிங் வழங்க வருகிறது ஆப்
புதுடெல்லி: மொபைல் அழைப்புகள் தரமாக இருக்கிறதா, இல்லையா என தரத்தை பதிவு செய்ய மொபைல் ஆப் அறிமுகம் செய்ய டிராய் முடிவு செய்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சலுகைகள் மற்றும் வசதிக்கேற்ப ஒருவரே இரண்டு அல்லது மூன்று சிம்கார்டுகள் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் ஏராளமான அழைப்புகள் ஒரே டவரில் இருந்து செல்கின்றன. இது கால் டிராப்புக்கு மட்டுமின்றி, சில சமயம் அழைப்பின் தரம் குறையவும் வழிவகுத்து விடுகிறது.
இந்நிலையில், மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அழைப்பின் தரம் எப்படி உள்ளது என்பதை பதிவு செய்து ரேட்டிங் அளிக்கும் வகையில் மை கால் என்ற ஆப்சை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட இருக்கிறது. இதுகுறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: வாடிக்கையாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அழைப்புக்கும் தர நிலையை பதிவு செய்யலாம். இதற்காக மை கால் என்ற ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். வாடிக்கையாளர்கள் இதை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அழைப்பு பேசி முடித்த பிறகு அதன் தரத்துக்கு ரேட்டிங் அளிக்கலாம். இதற்காக 5 ஸ்டார்கள் தரப்பட்டிருக்கும். இதுபற்றி டிராய் ஆய்வு செய்யும் என்றார்.