நீண்ட இடைவெளிக்குப் பின் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!
பிறந்தநாளையொட்டி ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி, தொண்டர்களை சந்திக்கவிருப்பதாகக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருமாதத்துக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி பின்னர் வீடு திரும்பினார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் யாரையும் சந்திக்காமல் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார்.
முதன்முறையாக 1957ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் கருணாநிதி. 13 பொதுத்தேர்தலை சந்தித்த கருணாநிதி, 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த கருணாநிதிக்கு வைரவிழா கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. அவரது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சி மைதானத்தில் நடக்கும் வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்கிறார். அப்போது, அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார். இந்த விழாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தொண்டர்களை கருணாநிதி சந்திக்கவிருப்பதால் தி.மு.க.வினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.