தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல்
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராகிறார் கமல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைக்கிறார். சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப் போகின்றனர். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகின்றனர் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத்தொடர்பும் வழங்கப்பட மாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும் .
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக இருப்பது குறித்து கமலிடம் கேட்ட போது, "விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன். என்னைத் தவிர வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வந்துள்ளது.
தற்போது எதிர்மறையாக இருக்கப் போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன். இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்கவைக்க போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன் " என்று கூறினார்.
எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீஸன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது. மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் போட்டிகள் தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும்.
விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறுகையில், "இந்த புதுவிதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் போது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது" என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.