சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா
அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
பீஜிங்:
வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அவ்வவ்போது கொண்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இனியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் போரை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆனால் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியது.
அமெரிக்கா மட்டுமல்லாது வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் அணு ஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தது. அணு ஆயுத சோதனை விவகாரத்தில் சீனா கடுமையாக விமர்சித்து வருவதால் இரு நாடுகளிடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக பீஜிங் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.